Farhana படம் வெளியாக பாதுகாப்பு கொடுத்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி - தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு

 


ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் #ஃபர்ஹானா. 


இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) வெளியானது. படம் இஸ்லாமிய பின்புறத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்கு இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசியதாவது :


தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது,


உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள் என்று அரசு தரப்பிடமிருந்து ஒத்துழைப்பு வந்தது. குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பும் தந்தார்கள்.

நீங்கள் படத்தை தாராளமாக வெளியிடலாம் என்று உறுதி அளித்தார்கள். இதெல்லாம் நாங்கள் கேட்காமலேயே அரசு தானாக முன்வந்து உதவி செய்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தை அவர்கள் பார்த்து யாரெல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களோ அவர்களிடம் என்னென்ன விளக்கம் கொடுக்க வேண்டுமோ அதை எங்களிடம் இருந்து பெற்று கொடுத்தார்கள். அதற்காக எங்கள் நிறுவனம் சார்பாகவும் எங்கள் படக்குழுவினர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், முதல் காட்சியை பார்த்த பிறகு மக்கள் சர்ச்சைக்குரியதாக இல்லை இன்று தெரிவித்ததால் காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொண்டது.


ஒரே ஒரு நாட்டை தவிர மற்ற அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் வெளியாகி உள்ளது. படம் வெளியான பின்பு இந்த படத்தின் சர்ச்சைக்குறிய விஷயம் எதுவும் இல்லை என்று பார்வையாளர்களே கூறினார்கள்.  ஒரே ஒரு திரையரங்கில், அங்கு உள்ள லோக்கல் பிரச்னை காரணமாக படம் வெளியிடப்படவில்லை. அதை வைத்தி கொண்டு தமிழ் நாடு முழுவது படம் நிறுத்தப் பட்டதாக தவறான செய்தி வந்தததால் அதற்கு விளக்கம் அளிக்கவும் இந்த திடீர் சந்திப்பு, என்றார்.


இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,


ஃபர்ஹானா படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டது. ஆனால், அதற்கான மைய புள்ளி எது என்பதை தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர இப்படத்திற்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படத்திற்கான சர்ச்சையை சூடான விவாத பொருளாக ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்ததுதான் இதற்கு காரணம். படத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. அரசுக்கும் காவல்துறைக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது. அதை விட்டுவிட்டு இப்படத்திற்கு வருபவர்களின் பாதுகாப்பிற்காக திரையரங்கில் காவல்துறை பாதுகாப்பிற்கு நிற்பது குற்ற உணர்வாக உள்ளது. 

ஃபர்ஹானா மற்ற படங்களை போல சாதாரணமாக வந்து பார்த்து செல்லக்கூடிய படம் தான். இதில் சர்ச்சைக்கான எந்த இடமும் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக தான் இந்த சந்திப்பை உருவாக்கி இருக்கிறோம்.


சர்ச்சையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கோ என் தயாரிப்பாளருக்கோ இல்லை. கதையின் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இரண்டாவது, எனக்கு மதம் சார்ந்து இந்து முஸ்லிம் என்று பேசுவது அசௌகரியமாக உள்ளது. அது தாண்டி பேச வேண்டும் என்பதற்கு ஆரம்ப புள்ளியாக இப்படத்தை நினைக்கிறேன். ஆகையால், இந்தப் படத்தோடு மத சாயத்தைப் பற்றி பேசுவதை கைவிட்டு விடலாம்.


அனைவரும் வாருங்கள், படத்தை பாருங்கள், அது பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.


ஒரு கைப்பேசி இருந்தால் யாரிடம் இருந்தும் எந்த நேரத்திலும் அழைப்புகள் வரலாம் என்று இங்குள்ள அனைத்து பெண்களுக்கும் தெரியும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வக்கிரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு யூடியூப்-ல் வரும் கமெண்ட் தான். அடிப்படை மனிதர்களிடம் உள்ள உளவியலை பேசக்கூடிய படம் தான் ஃபர்ஹானா.


இந்தப் படம் சென்சாருக்கு சென்றபோது, அங்கு அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் அதுவும் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியது எங்களை உற்சாகப்படுத்தியது.


மேலும், நான் என் படத்திற்கு சர்ச்சை உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த எண்ணத்திற்காகவும் படம் எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த வகையில், ஒரே ஒரு திரையரங்கில் அதுவும் லோக்கால் பிரச்சனை காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் செய்திகளில், தமிழ் நாடு முழுவதும் ஃபர்ஹானா ரத்து என்று மொட்டையாக தலைப்பிட்டு வரும்போது, படத்திற்கு மிகப்பெரிய தடங்கலாக அமைகிறது. அதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் படத்தை பார்க்க அனைவரும் வருவார்கள். படத்தின் மீது இருக்கும் சர்ச்சை தானாகவே விலகும்.


மேலும், மற்ற பெண்கள் அந்த வேலையை பார்க்கும் பார்வை வேறு. பர்ஹானாவின் பார்வை வேறு. எந்த இடத்திலும் ஃபர்ஹானா அந்த வேலையை மகிழ்ச்சியாக செய்கிறாள் என்று பதிவு செய்யவில்லை. அதுதான் இந்த கதையோட ஒழுக்கம்.


இந்த படத்தை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். என் முதன்மையான கதாபாத்திரம் தீவிரவாதி அல்ல. குடும்பத்தையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் செழிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள். என்னுடைய முக்கியமான கதாபாத்திரம், தன்னுடைய மனைவிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இஸ்லாமிய கணவன். தன் மகளைத் தவறாக புரிந்து கொண்டு பிறகு மன மாற்றம் அடையக்கூடிய இஸ்லாமிய பெரியவர். இதுவே போதுமான வித்தியாசம் என்று நான் நினைக்கிறேன் என்றார்.


எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும் போது,


 நான் எழுத்தாளர் ஆகவே பேச வந்திருக்கிறேன்.

முதலில் ஃபர்ஹானா என்ற பெண் வேலைக்கு செல்லும்போது, அவளுக்கு அது ஒவ்வாத வேலையாக இருப்பதால் அந்த வேலையில் இருந்து விலக நினைக்கிறாள். ஆனால், ஒரு வாரத்திற்கு பிறகுதான் அந்த வேலையில் இருந்து மாற முடியும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது ஒருவரிடம் இருந்து கண்ணியமான கால் வருகிறது. அவள் வேலை பார்க்கும் எட்டு மணி நேரமும் வேறு யாரும் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் அந்த ஒரு நபரே பேசுகிறார். அந்தப் படம் முழுக்க பொதுவான விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள், வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்கள். இந்த நபரை தவிர்த்து வேறு ஒருவருடன் பேச வேண்டிய கட்டாயம் வந்து இருந்தால் நிச்சயம் இந்த வேலையிலிருந்து மாறி இருப்பாள். இந்த கண்ணியமான நண்பரிடம் இருந்து பிரச்சனை எதுவும் இல்லாததால் தான் இந்த வேலையிலேயே தொடர்கிறாள். அப்படி அல்லாமல் வேறு வேறு நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மை. இவர்கள் படத்திற்குள் வேறு ஒரு படத்தை பார்க்கிறார்கள். அது எப்படி என்பது எனக்கு புரியவில்லை.


எந்த ஒரு படம் எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு மதமோ அல்லது ஜாதியையோ பின்புறமாக வைத்து தான் எடுக்க முடியும். அதில் இஸ்லாமியர்கள் பின்புலத்தை வைத்து எடுக்கக் கூடாது என்று கூறி பயத்தை ஏற்படுத்துவது சரியானதல்ல. கேரளாவில், அதிகமான படங்கள் இஸ்லாமிய பின்புலத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அங்கெல்லாம் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதில்லை. அப்படி சர்ச்சை எழுமேயானால், அது குறிப்பிட்டு ஒரு மதத்தையோ அல்லது சமுதாயத்தையோ குறிப்பிட்டு தீவிரவாதிகள், ஜிகாதி அல்லது மதமாற்றம் செய்பவர்கள் என்று காட்டும் போதுதான் எழுகிறது.


இஸ்லாமிய பின்புலத்தில் ஹிந்தியில் எவ்வளவோ படங்கள் வருகின்றன. அவர்களைப் பற்றி, அவர்களுடைய நல்ல வாழ்க்கையை பற்றியும் நிறைய படங்கள் வரவேண்டும். தமிழில் குறைவாக வருவது துரதிஷ்டவசமானது.


அதே மாதிரி ஒரு இயக்குநர் துணிச்சலாக இஸ்லாமிய பின்புலத்தைப் பற்றி எடுக்கும் போது அந்த படத்தில் உள்ள நேர்மறையான விஷயங்களை முன்னிலைப்படுத்த விடாமல், தவறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புவது தடங்களை ஏற்படுத்துகிறது.


இஸ்லாமியர்களைப் பற்றிய கட்டுக் கதைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவன் நான். இது போன்ற படங்கள் வருவதற்கு நாம் உற்சாகப்படுத்த வேண்டும். படம் எடுப்பவர்கள் என்ன கதை எழுதுகிறார்களோ அதை காட்டித்தான் ஆக வேண்டும். யதார்த்தத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டுமே தவிர, யதார்த்தத்தை எடுக்கவே கூடாது என்று பேசுவது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்.


ஒரு படத்தின் வாழ்வியலை காட்டுவதற்கும், தவறான அரசியல் பிரச்சாரம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தவறான அரசியல் பிரச்சாரம் இருந்தால் நானே தெருவில் இறங்கி போராட்டம் செய்வேன். ஆனால், இந்த படம் அப்படி இல்லை. நான் இந்த படத்தில் பணியாற்றுகிறேன். இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவன் நான். அப்படிப்பட்ட நான் இப்படி படத்தில் வேலை செய்கிறேன் என்றால் இது இஸ்லாமியர்களுக்கான படம் என்பதால்தான் என்றார்.Popular posts from this blog

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!

Web Series Review - Ayali

Karthi blessed with baby boy !