Vadivelu emotional as he returns to cinema with Lyca Film!

 என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும் - 'வைகைப்புயல்' வடிவேலு.



'எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார். (See  speech video)

லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.


இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,'' கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார். இதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் வாக்குறுதி அளித்தபடி வடிவேலுவின் பிரச்சனைகளை சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டார். வடிவேலுக்கான கதவையும் திறந்திருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


படத்தை பிரம்மாண்டமாக உருவாக்குங்கள். முன்னணி நடிகைகளையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக்கொள்ள கொள்ளுங்கள்.' என தயாரிப்பாளர் சுபாஷ்கரன் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இதற்கு முன் நான் சில தோல்வி படங்களை கொடுத்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் கூட்டணி வைத்து படம் இயக்குகிறேன். தமிழ் திரையுலகில் வடிவேலுக்கான இடம் இப்போதும் காலியாகத்தான் இருக்கிறது. அது அவருக்கான இடம். அவர் மீண்டும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.' என்றார்.


நடிகர் வடிவேலு பேசுகையில்,' என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் பட்டதை பேசுகிறேன். நான் அனுபவித்த துன்பத்தை போல் வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. என்னை அனைவரும் 'வைகைப்புயல்... வைகைப்புயல்..' என்று சொல்வார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலையே சந்தித்துவிட்டேன்.


நோயாளி ஒருவர் டாக்டரை சந்தித்து, 'எனக்கு மனசு சரியில்லை. தூக்கம் வரவில்லை. ஏதாவது மருத்துவம் பாருங்க..?' என கேட்டார். அதற்கு மருத்துவர்,' இன்று சனிக்கிழமை.. நாளை ஞாயிற்றுக்கிழமை.. நாளை மறுநாள் திங்கட்கிழமை வாருங்கள். உனக்கு வைத்தியம் பார்க்கிறேன்' என்று பதிலளித்தார். அதற்கு அந்த நோயாளி,' முடியவே முடியாது. எனக்கு இப்போதே மருத்துவம் பாருங்கள். என்னை காப்பாற்றுங்கள்.' என கேட்டுக்கொண்டார். அதற்கு மருத்துவர்,' நிச்சயம் நீங்கள் திங்கட்கிழமை வாருங்கள். உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்.' என பதிலளித்தார். மறுபடியும் நோயாளி, 'தனக்கு தூக்கம் வரவில்லை.' என சொல்ல, மருத்துவர், 'பேசாமல் ஒன்று செய்யுங்கள். பக்கத்தில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அந்த சர்க்கஸில் உள்ள பபூன் பிரமாதமாக காமெடி செய்வார். அதை பார்ப்பதற்காக எனக்கும் என் மனைவிக்கும் என இரண்டு டிக்கெட்களை எடுத்திருக்கிறேன். என்னுடைய மனைவிக்கான டிக்கெட்டை நான் உங்களிடம் தருகிறேன். நீங்களும், நானும் அந்த சர்க்கஸிற்கு சென்று பபூன் செய்யும் காமெடியை பார்ப்போம். அந்தக் காமெடியை பார்த்தால் உனக்கு உன்னுடைய துன்பம் எல்லாம் பறந்துவிடும். தூக்கமும் வரும்.' என்றார். அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம்,' அந்தப் பபூனே நான் தாங்க' என சொன்னார்.


கிட்டத்தட்ட நானும் அந்த பபூன் அளவில் தான்  தற்போது இருக்கிறேன். கடந்த நான்காண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளின் ஆசி தான் காரணம்.

கடந்த இரண்டு வருடத்தில் கொரோனா அனைவரின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. மகன் -தாயை பார்க்க முடியவில்லை. மகள் -தந்தையை பார்க்க முடியவில்லை. கணவன் -மனைவியை பார்க்க முடியவில்லை. மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தாலும் கூட, அவர்களுக்கு விசா கூட கிடைக்காது. அடுத்த தெருவில் மட்டுமல்ல.. தன்னுடைய வீட்டில் கணவன் இறந்தாலும் கூட, மனைவி மாடியில் நின்று கொண்டு, 'அவரை சீக்கிரம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். என் பிள்ளைகளுக்கும் அந்த கொரோனா வந்துவிடும்' என என கவலையுடன் தெரிவித்த காலகட்டம் அது. கொரோனா வந்து என்னுடைய பிரச்சனையை சாதாரண பிரச்சினையாக்கி, மற்றவர்களின் பிரச்சனையை பெரிசாகி விட்டது. கொரோனா எல்லோரையும் அச்சுறுத்தி, மிரள வைத்து விட்டது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் தூக்கமே இல்லாமல் செய்துவிட்டது. இதுபோன்ற நேரத்தில் என்னுடைய காமெடி மக்களுக்கு மருந்தாக பயன்பட்டதை நினைத்து, என்னை நானே ஆறுதல் படுத்திக் கொண்டேன்.


இந்த தருணத்தில் என்னை மீண்டும் நடிக்க வைப்பதற்காக முயற்சி எடுத்த சுபாஷ்கரன் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர் மக்கள் மத்தியில் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.


இனி என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். அனைவரையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்த வேண்டும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே நடிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.


நான் மட்டும்தான் பாதிப்படைந்தேன் என எண்ணியிருந்தேன். திரையுலகமும் பாதிக்கப்பட்டிருந்தது. திரையுலகம் மட்டுமல்ல உலகமே  பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் எனக்கு ஊக்கமளித்து நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன்.


தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்றைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவை சந்தித்தேனோ... அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கை பிரைட் ஆகிவிட்டது. இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும் என நம்புகிறேன்.' என்றார்.


லைகா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ்குமரன் பேசுகையில்,' வடிவேலு விவகாரத்தில் சுமுகமான பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உதவி செய்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளecர் சங்கத் தலைவர் முரளி, செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மன்னன் ஆகியோருக்கு லைகா நிறுவனம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.' என்றார்.


இதைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வடிவேலு பதிலளித்தார். அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்தார். பாட்டு பாடினார். அவர்களின் விருப்பப்படி 'பஞ்ச் டயலாக்' பேசி அனைவரையும் கலகலப்பாக சிரிக்க வைத்தார்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!