என்ஜாய் ; விமர்சனம்முழுக்க முழுக்க இளைஞர்களை  குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘என்ஜாய்’. டைட்டிலுக்கு ஏற்றபடி இரண்டு மணி நேரமும் படம் பார்ப்பவர்களை என்ஜாய் பண்ண வைத்துள்ளதா இந்த படம் ? பார்க்கலாம்.

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.

காதலி இருந்தாலும், சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ண நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்பி செல்கிறார்கள்.

அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். இதனை பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், பார்ட்டியில் முதன்முறையாக என்ஜாய் பண்ண வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் ஒன்றாக சந்தித்து ஒரே அறையில் தங்கும் சூழலும் உருவாகிறது. ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்ட தோழிகளுக்கு பார்ட்டியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அவர்களுக்கு உதவப்போய் இந்த மூன்று இளைஞர்களும் சிக்கலில் சிக்குகிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா ? இல்லை இழப்பை சந்தித்தார்களா ? இதில் அவர்களுக்கு கிடைத்த பாடம் என்ன ? படம் நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பது மீதிக்கதை.

இன்றைய பல இளைஞர்களின் மனோபாவம், அது ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும்.. திருமணத்திற்கு முன்பே ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது அதற்கேற்றபடி மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களை அந்த மாயைக்குள் தூண்டில் போட்டு இழுக்கிறது. இந்த விஷயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைவருமே இன்றைய இளைஞர்களின் தாகம், மோகம், வேகம், அதனால் ஏற்படும் குழப்பம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
காதலியிடம் இருந்து ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்காதா என சதா ஏங்கியபடியே  தனது ஐஏஎஸ் படிப்பில் தடுமாறும் மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என நினைக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சனையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே படத்தில் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் டான்ஸர் விக்னேஷ் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். அவருக்கு அது ஒர்க் அவுட்டும் ஆகியுள்ளது. மதன்குமார் சற்று சீரியஸ் முகம் காட்டினாலும் காதலில் விழும் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல இருந்தாலும் இந்த மூவரும் ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியுள்ளனர்.

அதேபோல கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்து, அந்த கலாச்சாரத்தை பதட்டத்துடன் எதிர்கொண்டு, அதை எப்படி அணுகுவது என ஒரு தெளிவில்லாமல் குழம்பும் இளம்பெண்களின் பிரதிபலிப்பாகவே ஜீவி அபர்ணா மற்றும் சாருமிசாவின் கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் சோடை போகாத நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடித்துள்ளனர்.

இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சும் அணுகுமுறையும், இடைவேளைக்கு பின்னான ரொமான்ஸும் இந்த மூவரில் இவருக்கு கொஞ்சம் கூடுதல் மார்க் பெற்று தருகிறது.

கல்லூரியில் சீனியர்கள் எல்லாம் இப்படி நல்ல தோழிகளாக இருந்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கும் விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஹாசின். சூழ்நிலை காரணமாக அவர் தனது லைப்ஸ்டைலை மாற்றிக்கொண்டாலும் தன்னைப்போலவே மாற முயற்சிக்கும் தனது தோழிகளை அவர் ஆரம்பத்தில் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்த முயற்சிப்பது அவர் மீதான மரியாதையை கூட்டுகிறது..

மதன்குமாரின் சீரியஸ் காதலியாக வரும் சாய் தன்யா கதாபாத்திரம்  இன்றைய இளம் பெண்கள் காதலை எப்படி பாதுகாப்பாக அணுக வேண்டும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். இவர்கள் தவிர டெரர் போலீஸ் அதிகாரியாக  வலம் வந்து கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பில்லி முரளி, வீக்-என்ட் பார்ட்டி நடத்துகிறேன் என டீசன்டான வில்லத்தனம் காட்டியிருக்கும் ரிசார்ட் ஓனர்  "காலாட்படை" ஜெய், பெண்களை அரக்கத்தனமாக அணுகும் சைக்கோ வில்லன் யோகிராம் என இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களும் கவனம் பெறுகின்றன.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவில் சென்னையை விட கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதோ நாமே சுற்றுலா போய்வந்த உணர்வை தருகின்றது. அதேபோல கேஎம்.ரயானின் இசை இந்த படத்திற்கான பொருத்தமான பாடல்களை கொடுத்திருக்கிறார் குறிப்பாக  இடைவேளைக்குப்பின் வரும்  இரண்டு பாடல்கள் அருமை சபேஷ்-முரளியின் பின்னணி இசை விறுவிறுப்பை கூட்டியுள்ளது. மணி குமரனின் படத்தொகுப்பும் அந்த விறுவிறுப்புக்கு பக்கபலமாக கை கொடுத்துள்ளது.

இளைஞர்களை மையப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாக இந்த கதையை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி. அந்தவகையில் அவரை முதலில் பாராட்டி விடலாம். குறிப்பாக இன்றைய பல இளைஞர்களின் மனப்போக்கை ஒவ்வொரு கதாப்பாத்திரம் வாயிலாக நன்றாக வெளிப்படுத்தவும் செய்துள்ளார் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும். அதேசமயம் கதைப்போக்கில் நகைச்சுவையாக இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்களை   தவிர்த்து இருக்கலாம் ஒருவேளை இளைஞர்கள் மட்டும் படம் பார்த்தால் போதும், அவர்கள் நிச்சயம் இதை ரசிப்பார்கள் என நினைத்து விட்டாரோ என்னவோ ?

அதேபோல நண்பர்கள் மூவரும் இருக்கும் வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் அந்த ஆன்ட்டி போர்சன், கையில் முளைத்திருக்கும் ஆறாம் விரல் போல தேவையற்ற ஒன்றாகவே நினைக்க தோன்றுகிறது.. இப்படி சின்னச்சின்ன குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இது இளைஞர்கள் ரசித்து பார்க்கக்கூடிய, அவர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் சொல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் என தாராளமாக சொல்லலாம்.

தயாரிப்பு - 
எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன்

ஒளிப்பதிவு -
 KN அக்பர்,

இசை - Km ரயான் .

எடிட்டர் - மணி குமரன்.

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

பாடல்கள் - விவேகா, உமாதேவி.

நடனம்- தினேஷ்.

சண்டை- டேஞ்சர்மணி

கலை- சரவண அபிராமன்.


நடிகர்கள்- 

மதன்குமார் 
டான்சர் விக்னேஷ்
ஹரீஸ்குமார்
நிரஞ்சனா
ஜீ,வி அபர்ணா,
சாய் தன்யா
ஹாசின்
சாருமிசா

Popular posts from this blog

Karthi blessed with baby boy !

Kavin, Reba John in web series Akash Vani !

I love you with all of my heart -Gautham Karthik declares, Manjima Mohan responds!