எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.*

 


‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். 



'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...


'' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய புத்தகம் ஒன்று வெளியானதாக தகவல்  இணையதளங்களில் பரவியது. இது தொடர்பாக எழுத்தாளர் பாலகுமாரனின் புதல்வர் சூர்யா பாலகுமாரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இது எங்களின் கவனத்திற்கு வந்தது. மேலும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் மூவரும் சூர்யா பாலகுமாரன் அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். எங்களை அவர்கள் உவகையுடன் வரவேற்றனர். 


அதனையடுத்து படத்தின் கதைக்கும், பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், படத்தின் தலைப்பிற்காக மட்டுமே பயணிகள் கவனிக்கவும் என்பதை பயன்படுத்தியிருப்பதாகவும் விளக்கமளித்தோம்.  எங்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாலகுமாரன் குடும்பத்தினர், நன்றி என்ற அறிவிப்பில் பாலகுமாரன் அவர்களது பெயரை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறோம் மேலும் இவ்விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ” என குறிப்பிடப்பட்டிருக்கிறது-. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாத பொருளாக பேசப்பட்டு வந்த 'பயணிகள் கவனிக்கவும்' என்ற பட தலைப்பு குறித்த விவகாரம் முடிவுக்கு வந்தது. 


சமூக வலைதள பக்கத்தில் பகிரப்படும் செய்திகள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மையப்படுத்திய இந்த 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் கதை, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்ததும், படக்குழுவினர் இதனை சமூக வலைதளங்கள் மூலமாகவே கையாண்டு வெற்றி கண்டதை இப்படத்தின் வெற்றியாக கருதுகிறார்கள்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!