பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு



பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’  படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனூடாக தமிழில் சாதனை படைத்த இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகிய இருவரும், இந்தியிலும் தங்களது புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள். 

சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் கலை வடிவத்தையும் பறைசாற்றிய ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’ எனும் தமிழில் தயாரான நீண்ட வலைதள தொடரின் கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதிகள். இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படம், இந்தியில் மறு உருவாக்கத்தின் போது ஹிருத்திக் ரோஷன், சயீப் அலி கான் ஆகிய இரண்டு நட்சத்திர நடிகர்களும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, இந்தி திரையுலக ரசிகர்களுக்காக சிற்சில மாற்றங்களை செய்து, ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தை உருவாக்கியிருந்தனர். தமிழில் இசைஜாலம் செய்த இசையமைப்பாளர் சாம் சி எஸ் தான் இந்தி பதிப்பிற்கும் இசையமைத்திருந்தார்.

‘விக்ரம் வேதா’ இந்தியில் வெளியானவுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி நேர்த்தியாக இயக்கியிருந்ததாகவும், படத்தின் வெற்றிக்கு சாம் சி எஸ் அவர்களின் நுட்பமான பின்னணியிசையும் காரணம் என்றும் ரசிகர்களும், விமர்சகர்களும் நேர்மறையான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். அத்துடன் இயக்குநரையும், இசையமைப்பாளரையும் பாராட்டினர். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதியினரும், விக்ரம் வேதாவை கதை சொல்லும் உத்தியில் வித்தியாசமான பாணியை அறிமுகப்படுத்தி தமிழில் வெற்றி பெற செய்ததைப் போல், இந்தியிலும் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போட்டியை, காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ‘விக்கிரமாதித்தன் வேதாளம் ஏறும் கதை’ பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள் அவர்களுடைய இந்த ஸ்டைலை, தமிழ் ரசிகர்களை போல் இந்தி திரையுலக ரசிகர்களும் ஏற்று, கொண்டாடி வருகிறார்கள்.

‘விக்ரம் வேதா’ படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையிலும், கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கென பிரத்யேகமாகவும்,  கதைச் சம்பவங்களுக்கென தனித்துவமாகவும் என பின்னணி இசையில் தன் ராஜாங்கத்தை நடத்தி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்பிற்கு இசையமைத்ததன் மூலம் சாம் சி எஸ்ஸின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story