தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் - நடிகர் ஆர்.ஜே.பாலாஜி


ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பட குழுவினர் பேசியதாவது

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது,

லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் நன்றாக கதை தேர்வு செய்வார். இருவருமே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போவார்கள். தளத்தில் இருவரும் பேசிக்கொள்ளும்போதே கதையிலும், கதாபாத்திரத்திலும் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுப்பார்கள். சராசரி மனிதனின் பார்வையிலே தான் சிந்திப்பார்கள். ஆகையால் தான் இருவருக்கும் தொடர்வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், மக்கள் செல்வி (ஐஸ்வர்யா ராஜேஷ்)க்கும் நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் மதன் பேசும்போது,

லஷ்மன் சார் ஒரு நாள் போனில் அழைத்து ஒரு கதை இருக்கிறது, கேளுங்கள் என்றார். இயக்குநரை சந்திக்கத்தான் சென்றேன். ஆனால், 3 மணி நேரம் கதை கூறினார். நானும், இயக்குநரும் நல்ல நண்பராகி விட்டோம். இந்த நன்றாக வந்திருக்கிறது என்று நானே சொல்லக் கூடாது. இப்படத்தில் பணியாற்றியதற்கு மகிழ்ச்சி. ஆர்.ஜே.பாலாஜியுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. நாம் சோர்ந்து போகும் நேரத்தில் எதாவது நகைச்சுவை கூறி சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வார் என்றார்.

நடிகர் விஷ்வா பேசும்போது,

இந்த படத்தில் இறுதியாக தேர்வானது நான் தான் என்று நினைக்கிறேன். இப்படத்தில் என்னுடையது ஒரு திருப்புமுனையான கதாபாத்திரம். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் அட்டக்கத்தி படத்தில் பணியாற்றினேன். அதன்பிறகு இப்படத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பார்த்ததும் ஹாய் விஷ்வா என்றார். ஆனால், அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தும் கூட அப்போது இருந்ததுபோலவே இன்னமும் இருக்கிறார். அவருடைய வளர்ச்சிக்கு இதுதான் காரணம். கிருஷ்ணகுமார் சார் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்து காட்டுவார். அவரைப் பின்பற்றினாலே போதும், நாம் நன்றாக நடித்துவிடலாம்.

நடிகர் ராஜா ஐயப்பா பேசும்போது,

ஆர்.ஜே.பாலாஜி உடன் பல காட்சிகள் இருந்தது. நடிக்கும்போது சீரியஸாக மாறிவிடுவார். அதேபோல, இப்படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்தது. ஐஸ்வர்யா மேடமும் நன்றாக பழகினார்.

கலை இயக்குநர் வீரமணி பேசும்போது,

இந்த நிறுவனத்தில் எனக்கு 2வது படம். இந்த படத்தின் இயக்குநரை முதன் முதலில் சந்திக்கும்போது, மலையாள இயக்குநர்கள் உயிரோட்டமாக எடுப்பார்கள் என்று தயக்கமாக இருந்தது. ஆனால், எனக்கு தெரிந்ததை செய்தேன். இப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜியை வேறு கோணத்தில் பார்ப்பார்கள். காட்சிக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்திருக்கிறார். 
ஐஸ்வர்யா ராஜேஷ்-ஐ ரம்மி படத்தில் பார்த்தேன். அன்று நான் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் நடிப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் யுவாவின் பணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.

நடிகை ரித்திகா பேசும்போது,

இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை சண்டைபோட்டு வாங்கினேன். ஆர்.ஜே.பாலாஜியும், ஐஸ்வர்யா ராஜேஷும் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து பணியாற்றுவார்கள். யுவாவும், கிருஷ்ணகுமாரும் வேகமாக பணியாற்ற கூடியவர்கள் என்றார்.
நடிகர் தமிழரசன் பேசும்போது,

பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் எப்போது முடியும் என்று நேரத்தை சரியாக கூறமாட்டார்கள். ஆனால், இயக்குநர் கிருஷ்ணகுமார் மிகவும் திட்டமிட்டு அதேசமயம், வேகமாகவும் பணியாற்றினார். இன்று 5 காட்சிகள் என்றால், அதற்கு மேல் ஒரு காட்சிகூட அதிகமாக எடுக்கமாட்டார் என்றார்.

ஒளிப்பதிவாளர் யுவா பேசும்போது,

இந்த வாய்ப்புக் கொடுத்த பிரின்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. ஆர்.ஜே.பாலாஜியை வைத்து பொதுமக்களுடன் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த காட்சிகள் உயிரோட்டமாக வந்திருக்கிறது. அனைவருடனும் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து, என்னைத் தொடர்பு கொண்டு ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா? என்று தெரியவில்லை என்றார்கள். அப்படியென்றால், நான் முதலில் கதை கேட்கிறேன் என்று கூறினேன். என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார். கதையையும், கதாபாத்திரத்தையும் விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்கு பிடித்து விட்டது. அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது. அவருடைய பணியாற்றும் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் வசனம் உறுதியாக இருந்தது. முதல்முறையாக ஆர்.ஜே.பாலாஜியுடன் எனக்கு முதல் படம். எனக்கு நிறைய அறிவுரை கூறியிருக்கிறார். இப்படக்குழு அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் பேசும்போது,

நான் மலையாளத்தில் தான் நிறைய படங்கள் இயக்கியிருக்கிறேன். வெங்கடேஷ் சார் மூலம் தான் லக்ஷ்மண் சாரின் அறிமுகம் கிடைத்தது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்போது புது அனுபவமாக இருந்தது. கதை கூறும்போது, லக்ஷ்மண் சார் தான் ஆர்.ஜே.பாலாஜியை கூறினார். இப்படம் முழுக்க சீரியஸாகத்தான் போகும் என்று கதை கூறியதும் ஒப்புக் கொண்டார். அதுதான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். ஐஸ்வர்யா மேடம் கூறியது சரிதான். அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் படம் வெளியானதும் தெரியும். 

நான் முதலில் இங்கு வரும்போது மலையாளத்தில் ஒரு மாதிரி இருக்கும், இங்கு வேறு மாதிரி இருக்கும் பஎன்று பலர் கூறினார்கள். ஆனால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது,

இயக்குநரின் கதை கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. அந்தளவிற்கு அவர் அனைத்தையும் திட்டமிட்டு வைத்திருந்தார். கதை கேட்கும்போதே ஆர்.ஜே.பாலாஜி தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. சுமார் 7 மாத காலத்திற்குப் பிறகு தான் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. கதை கேட்டதும் அவர் உடனே ஒப்புக் கொண்டார். அதுவரை இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு படப்பிடிப்பு நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. இப்படம் சீரியஸான திரில்லர் படம். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 

பெரிய பட்ஜெட், பல வெளிப்புற படப்பிடிப்புகள், நிறைய கலைஞர்கள் ஆனால், சரியாக திட்டமிட்டு வேகமாக முடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

நடிகர் ஜோ மல்லூரி பேசும்போது,

இப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது வெளியே தெரிய வேண்டாம் என்று இயக்குநர் நினைத்திருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கு வந்திருக்கிறேன். இப்படத்தில் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம். மலையாள திரையுலகின் அடர்த்தியான அறிவு இந்த இயக்குநருக்கும் இருக்கும் என்பதை இப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தைத் தரும். ஆர்.ஜே.பாலாஜியுடன் நீண்ட பயணத்துடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். அவர் பேராற்றலுள்ள ஒரு நாயகன். எல்லாவற்றுக்கு கேள்வி, பதில், ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி, இயக்குநருடன் அவருக்கும் இருக்கும் உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் பார்க்கிற பொழுது பெரிய உயரத்திற்கு வந்து கொண்டிருக்கும் நாயகனோடு இணைந்து பணியாற்றியதில் பெருமையாக இருக்கிறது.

ஐஸ்வர்யாவோடு இது எனக்கு 4வது படம். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்போதும், பலமும் நியாயமும் சேர்க்கிறவர், தனக்கென தனிமுத்திரை பதிக்கக் கூடியவருக்கு இப்படம் தங்கத்திலான மைல்கல்லாகத்தான் இருக்கும். இப்படம் வெற்றிப் படத்திற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. இத்தனை காட்சிகள் தான் இருக்க வேண்டும் என்று தீர்க்கமாக இருந்த இயக்குநரைப் பார்த்து வியப்பாக இருந்தது. உதவி இயக்குநர்கள் அனைவரும் ஒரு கதையை எப்படி கூற வேண்டும் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுத்தவர், தமிழிலும் வெற்றி படத்தைக் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் லக்ஷ்மனுக்கும் நன்றி என்றார்.

நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது,

வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும் இதை செய்தால் தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என 3 படங்களுக்கு நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். 

அதனால் நான் லக்ஷ்மன் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின் தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் வைக்க மாட்டேன். இதுதான் நான் 7 மாதங்கள் தொடர்பு கொள்ளாததற்கு காரணம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது போல் தான் கிருஷ்ணகுமார் சார் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார்.

இந்த படத்தில் 33 வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன்.

அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.

அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார். அவர் திறமையான குழுவை வைத்திருக்கிறார். நான் பொறாமைபடும் அளவிற்கு அந்த குழுவை வைத்திருக்கிறார். லக்ஷ்மன் சார் பெரிய பொருட்செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை. ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி.

இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இருப்பான். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

ஐசரி கணேஷ் சார் எப்படி என் குடும்பத்தில் ஒருவரோ அப்படித்தான் லக்ஷ்மன் சாரும். கார்த்தி சார் போல, தற்போது எனக்காகவும் லக்ஷ்மன் சார் கதை கேட்க ஆரம்பித்து விட்டாராம்.

படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்கான இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் என்றார்.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story