சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !



கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். 






தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. 



இன்றைய விழாவில் கலந்துகொண்ட 



நடிகர் கார்த்தி பேசியதாவது… 

கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன் படம் செய்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு, உழவன் பவுண்டேசன் ஆரம்பித்த பிறகு, சென்னையில் விவசாயிகள் விவசாயம் சார்ந்து வேலை செய்பவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதில் முக்கியமானவர்கள் ஹிமாக்கரன் அவர்கள், ரேகா அவர்கள், அவர் நண்பர்கள் புரபசர் இஸ்மாயில் அவர்கள், அவர்களோடு சேர்ந்து பேசும்போது,  அவர்கள் எங்களுக்கு நிறைய அட்வைஸ் தந்தார்கள்.  சென்னையில் விவசாயம் சார்ந்து என்னென்ன செய்யலான என  பேசும்போது, சென்னையில் திருவிழா நடத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு முன்னர் நடந்தது, நம் குழந்தைகளுக்குக் கிராமத்தைப் பற்றி, நம் உணவுகள் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தெரியவில்லை, அதைத் தெரியப்படுத்தும் வகையில், பல மாதங்கள் போராடி இந்த செம்பொழில் திருவிழாவை  மீண்டும் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். இதற்கு உழவன் பவுண்டேசன் ஒரு சிறு உதவியாக இருந்துள்ளது எனக்குப் பெருமை. இங்கு கிராமத்தில் நடக்கும் எல்லாமும் இருக்கிறது. மாட்டு வண்டியில் ஆரம்பித்து, காளைகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், சின்ன சின்ன உணவுகள், தெருக்கூத்து,  எனத் திருவிழாவில் இருக்கும் அனைத்தும் இங்கு இருக்கிறது. இந்த விழா இன்னும் இரண்டு நாட்கள் நடக்கிறது. என் குடும்பத்தினர் நாளை வருகிறார்கள். எல்லோரும் வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துங்கள். ஜல்லிக்கட்டு பற்றிக் கேட்கிறார்கள், சென்னையில் நடந்தால் நல்லது தான், அதையும் இவர்களிடம் சொன்னால் ஏற்பாடு செய்து விடுவார்கள், சென்னையில் மாடு கொண்டு வந்துவிடப் பலர் ஆசைப்படுவார்கள், போட்டி போடுவார்கள், எல்லா காளைகளும் வந்துவிடும். நான் நிஜத்தில் ஜல்லிக்கட்டு பார்த்ததில்லை, மெய்யழகன் பட ஷீட்டிங்கில் தான் சென்று பார்த்தேன். அது பிரமாதமான ஒரு விசயம். மாட்டை அடக்குவதோ, காயப்படுத்துவதோ இல்லை, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் மாட்டைக் காயப்படுத்துவார்கள் ஆனால் நம் ஜல்லிக்கட்டு ஏறி தழுவுவது தான். மாட்டை அரவணைப்பது தான் நம் ஜல்லிக்கட்டு. இங்கு இந்த திருவிழாவில் பல விவசாயிகள் தங்கள் விலை பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். எல்லோரும் வந்து பார்வையிடுங்கள். இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் இணையுங்கள். அனைவருக்கும் நன்றி. 


பாரம்பரிய கலைகளின் குரு ஐயா காளீஸ்வரன்  பேசியதாவது…

பாரம்பரிய கலைகளை அரங்கேற்ற மேடை அமைத்துத் தந்த, செம்பொழில் குழுவிற்கு நன்றி. என் மாணவி ரேகா அவர்களுக்கு நன்றி. பெரிய பெரிய ஆட்கள் இருக்கும் இடத்தில் என் போல எளிய கலைஞர்களைக் கௌரவப்படுத்துவதற்கு நன்றி. இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கார்த்தி அவர்களுக்கு நன்றி. 1024 கலைகள் தமிழ் நாட்டில் இருக்கிறது, அதைப் பாதுகாத்து நாங்கள் இங்குக் கொண்டு வந்துள்ளோம்.  உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப்பாட்டு, களைப்பாட்டு எல்லாம் இல்லாமல் போய்விட்டது, அதைச் சேகரிக்கும் கலைஞர்களை, பாதுகாக்கும் கலைஞர்களை, செம்பொழில், உழவன் பவுண்டேசன் கௌரவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 


மண்புழு ஆராய்ச்சியாளர் சுல்தான் பேசியதாவது..

உழவுக்கு உழவன் பவுண்டேசன் மாதிரி விவசாயத்திற்கு மண்புழு. மண்புழு இருந்தால் அந்த நிலத்தில் ஆரோக்கியம் இருக்கும். இந்த விழாவை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். உழவன் பவுண்டேசன், செம்பொழில் அனைவருக்கும் நன்றி. முன்பு ஒரு முறை இயற்கை விவசாயம் கற்றுத்தரக் கூட்டம் போட்டோம் 4பேர் மட்டும் தான் வந்தார்கள், இவர்கள் மூலம் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள, இன்று  நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். மகிழ்ச்சி. இங்குள்ள விவசாயிகளிடம் எதாவது ஒரு பொருள் வாங்குங்கள் அனைவருக்கும் நன்றி.

Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Film Review: 7G The Dark Story

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career