சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’*
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களும் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இனணகிறார்கள்.
‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சதீஷ் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பிந்தியா மற்றும் அரவிந்த் மேற்கொள்கிறார்கள்.
அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கியது.
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கின் தொடக்கவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் படபிடிப்பிலிருந்து சூர்யா மும்பைக்குச் சென்றார். அவரது வருகை படக்குழுவினரை உற்சாகப்படுத்தியது.