இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.
ஹிட்லர் திரைப்படத்தை ஆக்ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.
ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.