Shanthnu's Murungukkai Chips has grand audio launch!
முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய....
நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது...
நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும் ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. என்னிடமும் அவரிடமும் படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார். படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தப்படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வரவேண்டும். சமந்தா எனக்கு நண்பர் அவரிடம் அழகாக இருக்கீங்க, தமிழ் பேசறீங்க நான் சொல்லியிருக்கிறேன். அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் யோகிபாபு கூறியதாவது..
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ரவீந்தர் சார், இயக்குநர் அனைவருக்கும் நன்றி. சாந்தனு ஒரு போன் செய்ததும் வந்து நடித்துதந்தேன் என்று சொன்னார். 15 வருடத்துக்கு முன்னாடி பாக்யராஜ் சார் ஆபீஸ் முன் வாய்ப்புக்காக நின்றிருப்பேன் அப்போது என்னை கவனித்து, பாக்யராஜ் சார் சித்து பிளஸ் 2 படத்தில் ஒரு காட்சியில் வாய்ப்பு தந்தார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது. அந்த நன்றியுணர்வில் தான் இந்தப்படத்தில் நடித்தேன். இன்னும் எத்தனை படங்கள் சாந்தனு கூப்பிட்டாலும் நடிப்பேன். இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது...
இந்தப்படத்தில் மிகவும் பிடித்தது டைட்டில் தான் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார் ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர் அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப்படமும் வரவில்லை என்றார் உலகத்திலேயே எந்தப்படமும் வரவில்லை அதனால் அவர் கவலைப்பட வேண்டாம். நாயகி நன்றாக நடித்திருக்கிறார். பாண்டியராஜ் சார் பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதை தான் ‘இன்று போய் நாளை வா’ என்றார், எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார். எனக்கு டான்ஸில் குரு அவர் தான் அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி.
தயாரிப்பாளர் CV குமார் கூறியதாவது...
எத்தனையோ தோல்விகளை தாண்டி சினிமா செய்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அவர் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள்.
நடிகை அதுல்யா கூறியதாவது...
முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் செய்ய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் அவருக்கு நன்றி. இயக்குநர் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டியுள்ளார் அவருக்கு நன்றி. நல்ல பாடல்கள் மூலம் படத்தின் வரவேற்புக்கு காரணமாக இருக்கும் இசையமைப்பாளர் தரணுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஊர்வசி மேடமும் இணைந்து நடித்தது பெருமை. சாந்தனு மிக ஸ்வீட்டானவர். இப்படத்தில் மிக ஆதரவாக இருந்தார். படத்தில் நடிக்க நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது...
எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி. என் வாழ்க்கை 20/20 வனிதா என போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள். யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள். இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம், ஆனாலும் படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார். இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில் தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. நான் நல்ல படம் எடுத்த புரடியூசர் இல்ல ஆனா நல்ல புரடியூசர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. இந்தப்படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம்.