டிரைவர் ஜமுனா படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். '' என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி, கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் ராமர், கலை இயக்குனர் டான் பாலா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி பேசுகையில், '' வத்திக்குச்சி படத்திற்கு நான் மிகப் பெரும் ரசிகன். கொரோனா காலகட்டத்திற்கு முன் 'வத்திக்குச்சி' இயக்குநர் கின்ஸ்லின், 'டிரைவர் ஜமுனா' படத்தின் கதையை விவரித்தார். கதை கேட்டு முடித்ததும் தயாரிக்கலாம் என முடிவெடுத்தேன். அந்தக் காலகட்டத்தில் 'க / பெ ரணசிங்கம்' படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்தக் கதைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என எண்ணி, அவரிடம் கதையை சொன்னோம். அவரும் கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களுடைய அர்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். 'டிரைவர் ஜமுனா' அற்புதமான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் பிரம்மாண்டம் என்பது கதையின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புதான். நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘ஃபர்ஹானா’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து, 'டிரைவர் ஜமுனா' படத்தினை வெளியிடுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
இயக்குநர் கின்ஸ்லின் பேசுகையில், '' தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரியிடம் 'டிரைவர் ஜமுனா' படத்தின் கதையை சொன்னவுடன் அவருக்கு பிடித்தது. அவரிடம் நுட்பமான கதையறிவு உண்டு. கதையில் பல இடங்களில் பல சந்தேகங்களை எழுப்பினார். ஆனால் அதற்கான தீர்வினை நானே எடுக்கும் முழு சுதந்திரத்தையும் வழங்கினார்.
இந்தப் படம், ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான படம். வாலாஜாபாத் எனும் இடத்திலிருந்து ஈசிஆர் எனும் இடத்திற்கு கூகுளில் பயண நேரம் எவ்வளவு? என்று கேட்டால், '90 நிமிடம்' என பதிலளிக்கும். அந்த 90 நிமிடமும், கதை தொடங்கிய பிறகு இருபதாவது நிமிடங்களுக்கு இந்தப் பயணம் தொடங்கும். ஆக இரண்டு மணி நேரம் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த திரைப்படம். நெடுஞ்சாலை பயணமும், காரிலும் தான் மொத்த திரைக்கதையும் பயணிக்கும். இதனை திரைக்கதையாக எழுதும் போதும், இதனை காட்சிப்படுத்தும் போதும் ரசிகர்களுக்கு சோர்வை தராமல் இருப்பதற்கான விசயங்களை இணைத்தோம். திரைக்கதை காரில் பயணிப்பதால் கதாபாத்திரங்களுக்கு இடையே நீண்ட நேரம் உரையாடலையும் வைக்க இயலாது. இதனால் நடிகர்களின் முகபாவனைகளையும், நடிப்புத் திறனையும் வைத்து தான் காட்சிகளை நகர்த்த வேண்டியதிருந்தது.
டிரைவராக நடிக்கும் கலைஞரின் நடிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால், இந்த திரைக்கதை வெற்றி பெறாது. முழு கதைக்கும் கதையின் நாயகி தான் மைய பாத்திரம். அவருடைய தோளில் சுமக்க வேண்டிய திரைக்கதை இது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார். அதிலும் காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சக நடிகர்களிடமும் பேசி நடிக்க வேண்டும். வண்டியை ஓட்டும் போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் அவர்கள் காரில் அமர்ந்து பயணிக்கும் போது காட்சி கோணங்களுக்கு ஏற்ப நடிக்கவும் வேண்டும். இவை அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்று நினைத்து காட்சிகளை உருவாக்குவது என்பது எளிதானது. ஆனால் கதையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் பயத்தை..அவருடைய நடிப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்துவது என்பது பெரும் சவாலானது. இது இயக்குநர்களின் கையில் இல்லை. நட்சத்திர நடிகர்களின் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளையும் அற்புதமாக உள்வாங்கி, வெளிப்படுத்தி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசை மூலம் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களின் முழு திறமையையும் இந்தப் படத்திற்காக வழங்கியிருக்கிறார்கள். '' என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், '' நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது. 'கனா' படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 'டிரைவர் ஜமுனா' வெளியாகிறது.
இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.
படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர், கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால், சவாலான காட்சிகளில் கூட சரியாக நடிக்க முடிந்தது. என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால்.. அதற்கான முழு புகழும் இயக்குநரையே சாரும்.
'வத்திக்குச்சி' படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் இயக்குநர் கின்ஸ்லினுக்கு இந்த படம் மிகப்பெரிய பாராட்டையும், வெற்றியையும், வரவேற்பையும் அளிக்கும்.
எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது. ஆனால் 'டிரைவர் ஜமுனா' படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.