கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்*
திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கோவையிலுள்ள ஜி ஆர் டி கல்லூரியின் மாணவ மாணவிகளின் முன்னிலையில் ‘கோப்ரா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சீயான் விக்ரம் பேசுகையில்“ திருச்சிக்குச் சென்றோம். மதுரைக்குச் சென்றோம். அங்கு ரசிகர்களின் வரவேற்பு எதிர்பாராத வகையில் இருந்தது. அந்த வரவேற்பை உங்களால் கடக்க முடியுமா..! முடியும் என்பதை உங்களுடைய கரவொலி நிரூபித்தது. அதற்கு நன்றி. ரசிகர்கள் அனைவர் மீதும் எனக்கு எப்போதும் மாறாத அன்பு உண்டு.
‘கோப்ரா’ படத்தை ஒட்டுமொத்த குழுவினரும் அனுபவித்து உழைத்தோம். இந்தத் திரைப்படத்தில் மீனாட்சி, மிருணாளினி, ஸ்ரீநிதி ஆகிய மூவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.
இதில் மீனாட்சி, கல்லூரி பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் துருதுருவென்று இருப்பார். அனைத்து புதிர்களுக்கும் விடை காணக்கூடிய தூண்டுகோலாக இருப்பார். அவர் படத்தில் பாதி மலையாளம்.. பாதி தமிழ்.. பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை மிருணாளினியும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலியாக உணர்வுபூர்வமான வேடத்தில் தன் மொத்த உழைப்பையும் வழங்கி இருக்கிறார்.
நடிகை ஸ்ரீநிதி, ‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன், இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கடும் உழைப்பாளி.
படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தினை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிடவேண்டும் என்பதற்காக இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவர் அவரால் இங்கு வர இயலவில்லை. அவருடைய இயக்கத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது. அதேபோல் ‘கோப்ரா’ படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்.
இந்தப் படத்தில் நான் ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். அதுவும் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கியமான அம்சம். இதை கடந்து இந்த திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் சினிமா. என எல்லாமே கலந்து இருக்கும். படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும். ‘கோப்ரா’ ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வெளியாகும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும். '' என்றார்.
இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாணவ மாணவிகளிடம் சீயான் விக்ரம் நடத்திய கலந்துரையாடலில் இடம்பெற்ற சுவராசியமான அம்சங்கள்...
• அந்நியன் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த படம் ஆனியனைப் போல் உரிக்க உரிக்க வெவ்வேறு லேயர்களை கொண்டிருக்கும்.
• நான் வாலிப வயதில் சைட் அடித்திருக்கிறேன். வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கையை முறையைத்தான் பின்பற்றி வருகிறேன்.
• இந்த பூமி பெரியது. இதனை எங்கள் தலைமுறையை சேர்ந்தவர்கள் சற்று சொதப்பி விட்டனர். இதனை இன்றைய இளம் தலைமுறையினரான நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நேர்மறையான அதிர்வுகளால் சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுகளை அகற்றி, ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.
• ‘மகான்’ படத்தில் இடம்பெற்ற காரில் செல்லும் காட்சியில், நானும் துருவ் விக்ரமும் பேசிக்கொண்டே பயணிக்கும் காட்சி... ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்படும் போது தான், அவருக்குள் இருக்கும் நடிகனை... நடிப்பாற்றலை... கண்டேன். ரசித்தேன்.
• கல்லூரி மாணவ, மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பாடலையும் பாடிய விக்ரம், 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற பஞ்ச் டயலாக்கை, தன் பாணியில் பேசி பாராட்டைப் பெற்றார். அத்துடன் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்து சீயான் விக்ரம் அசத்தினார்.
• “மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ... அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர் தான். உங்களையும் ஒரு நாள் உலகம் திரும்பி பார்க்கும்.” என சீயான் விக்ரம் தன்னுடைய எண்ணத்தை மாணவர்களின் மத்தியில் பகிர்ந்துகொண்ட போது, அவர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.
கோவையிலுள்ள ஜி. ஆர். டி கல்லூரியைத் தொடர்ந்து,ப்ரோஸோன் மால் எனும் கோவையின் பிரபலமான வணிக வளாகத்தில் ‘கோப்ரா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் ‘கோப்ரா படத்திற்கு ஆதரவு தாருங்கள்’ என பணிவன்புடன் சீயான் விக்ரம் கேட்டுக் கொண்டார்.