இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன - ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

 

‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். 


‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டிருக்கிறார். இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார் 


அதன் போது அவர் பேசியதாவது.... “ காந்தாரா -  அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது.  மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 


நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்த படத்தை என்னுடைய சொந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினேன். நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ... அதனைத் தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன். அப்பொழுது இருந்த சமூகம்... மக்களின் நம்பிக்கை... நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்தி தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள் என்றும், குலதெய்வங்களும் உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் நாங்கள்.


காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன். ‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.  இது தற்போது எம் மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன். இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!