grand 'One Way ' movie audio and trailer launch !

ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கிறது - ‘ஒன் வே’ படத்தை பாராட்டிய கே.ராஜன்

நடிகை குஷ்புவும் பெண் சிங்கம் தான் - ‘ஒன் வே’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

தமிழ் நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது - ‘ஒன் வே’ இசை வெளியீட்டு விழாவில் கவலை தெரிவித்த இயக்குநர் பேரரசு

’ஒன் வே’ டிரைலரை பார்க்கும் போதே படத்தில் பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது - இயக்குநர் அகத்தியன் பாராட்டு

படத்தின் டிரைலரும், பாடல்களும் படத்தை பார்க்க தூண்டுகிறது - ‘ஒன் வே’ படம் பற்றி இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

நடிகை குஷ்புவின் அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒன் வே’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறும் - ‘ஒன் வே’ இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பேச்சு

சின்ன படம், பெரிய படம் என்பதெல்லாம் இப்போது இல்லை - ‘ஒன் வே’ இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பேச்சு

‘ஒன் வே’ சின்ன பட்ஜெட்டில் தயாரான பான் இந்தியா படம் - இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல்

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டைக்காட்சிகளை வடிமைத்துள்ளார். ஹஸ்வத் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 4) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீ ஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பேசுகையில், “இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இந்த கதையை கேட்ட உடனே தயாரிக்க பிரபஞ்சன் சார் ஒப்புக்கொண்டார். அதுமட்டும் இன்றி, என்னை சுதந்திரமாக பணியாற்ற வைத்தார்.  இந்த படத்திற்கு இளையராஜா சாரை தான் இசையமைக்க வைக்க இருந்தோம். ஆனால், பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்காததால் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது தான் ஆடிசன் வைத்து இசையமைப்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இசையமைப்பாளருக்கு ஆடிசன் வைத்தது நாங்களாக தான் இருப்போம். ஏழு இசையமைப்பாளர்கள் வந்தார்கள், அவர்களில் அஷ்வின் மிக சிறப்பாக செய்தார். அவருடைய வேலை எங்களுக்கு பிடித்தது அதனால் அதான் அவரை இசையமைப்பாளராக்கினோம். அவரும் மிக சிறப்பாக பணியாற்றி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது. இப்போது நீங்க பார்த்ததை விட பல மடங்கு படத்தில் இருக்கும். அதுமட்டும் அல்ல, ஒரு சர்பிரைஸும் படத்தில் இருக்கிறது. அதாவது சின்ன பட்ஜெட்டில் உருவானஒரு பான் இந்தியா படம் தான் ‘ஒன் வே’. சின்ன படம் என்று சொன்னாலும் படம் பார்க்கும் போது சின்ன படமாக தோன்றாது. அந்த அளவுக்கு படம் இருக்கும். எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம், இனி படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் தான் உதவ வேண்டும். படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள். நன்றி.”  என்றார்.

நடிகை குஷ்பு பேசுகையில், “இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். காரணம், என் அண்ணனை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்காக தான் நான் இங்கு வந்தேன். ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய விசயம் இருக்கு என்று தெரிகிறது. படத்தில் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் அஷ்வினுக்கு என் வாழ்த்துகள். ஒரு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும். இளையராஜா சாரின் பின்னணி இசை பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக உள்ளது. எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார். எனவே, இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஆரா, இயக்குநர் சக்திவேல் என அனைவருக்கும் என் வாழ்த்துகள், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த நல்ல நாளில் இப்படி ஒரு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகை குஷ்பு இங்கு வந்திருப்பது இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. நடிகை குஷ்பு என் படங்களில் நடிக்கும் போது தமிழ் சரியாக பேசாமல் தடுமாறினார். ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்து சில நாட்களிலேயே தமிழ் கற்றுக்கொண்டு வசனத்தை பிச்சு உதறினார். இப்போது அவர் பேசும் தமிழால் பல மேடைகள் அதிர்கிறது. அப்போது அவருடைய அண்ணன் அப்துல்லா அவருடன் இருப்பார். அப்போதே அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கும் போல, அதனால் தான் இப்போது அவர் நடிகராக மாறிவிட்டார்.

இந்த படத்தில் பாடல்களும், டிரைலரும் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக பாரதியாரின் பாடலை புதிய வடிவத்தில் கொடுத்தது வரவேற்கும்படி இருப்பதோடு, பாராட்டும்படியும் இருக்கிறது. இசையமைப்பாளர் அஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பாடல்கள் எழுதியவர்களுக்கும் என் பாராட்டுகள். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் ஏதோ பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது, படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது. நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் அகத்தியன் பேசுகையில், “’ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக பாரதியாரின் பாடலை இப்படி ஒரு வடிவத்தில் கொடுக்க முடியுமா!, என்ற ஆச்சரியத்தை இசையமைப்பாளர் அஷ்வின் ஏற்படுத்தி விட்டார். வாழ்த்துகள் அஷ்வின். விருந்தினர்கள் சொன்னது போல் படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போதே படத்தில் வெயிட்டாக பல விஷயங்கள் இருப்பது தெரிவது உண்மை தான். ஆனால், இதை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த படம் பற்றி எனக்கு தெரியும், அப்போதே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எனக்கு தெரிந்துவிட்டது.

இயக்குநர் சக்திவேலை எனக்கு முன்பாகவே தெரியும். இந்த படத்திற்கு முன்பாக அவர் என்னிடம் ஒரு கதை சொன்னார், அந்த கதையை கேட்ட போது நான் ஆடிவிட்டேன், அப்படி ஒரு கதையாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அவர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு ‘மைதானம்’ என்ற படத்தை இயக்கினார். அதில் நான் நடித்தேன், அப்போதே அவரின் திறமை எனக்கு தெரிந்தது. திரைக்கதை அமைப்பதில் சக்திவேல் திறமைசாலி, அதனால் இந்த படம் வெற்றி பெறுவதோடு மட்டும் இன்றி, தமிழ் சினிமாவில் அதிர்வை ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “சின்ன படங்களின் விழா என்றாலே நான், கே.ராஜன் சார் உள்ளிட்ட பலர் வந்துவிடுவோம். அதனாலே நான் தினமும் இன்று எதாவது நிகழ்ச்சி இருக்கிறதா? என்று கேட்பேன். காரணம், பெரிய படங்களுக்கு பலர் வருவார்கள், ஆனால் சின்ன படங்களுக்கு எங்களை போன்றவர்கள் தான் துணை நிர்பார்கள். நாங்கள் வருவது பெரிய விஷயம் இல்லை. ஆனால், இங்கு நடிகை குஷ்பு வந்தது நிச்சயம் பெரிய விஷயம். ஆணுக்கு பெண்கள் சரிமம் என்று சொல்வார்கள், விமானம் ஓட்டுகிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால், என்னை பொருத்தவரை வலிமை நிறைந்த பெண்கள் யார் என்றால், அரசியலில் ஈடுபடுபவர்கள் தான். ஜெயலலிதா, இந்திரா காந்தி போன்றவர்களை சொல்லலாம். அந்த வரிசையில் நடிகை குஷ்பு அவர்களும் வலிமை மிக்க பெண், அவரை பெண் சிங்கம் என்றும் சொல்லலாம். காரணம், அரசியலில் ஈடுபட்டு பலரை எதிர்கொண்டு வெற்றிகரமான பெண்மணியாக பயணிப்பதோடு, தமிழை சரளமாக பேசுவதும் ஒரு காரணம்.

இன்று தமிழகத்தில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் பலர் தமிழ் பேசுவதில்லை, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிக்கொள்பவர்கள் தமிழை காப்பாற்றுவதில்லை. தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு தமிழ் தேர்வு பாடமாக தான் இருக்கிறது. அதனால், என்ன செய்கிறார்கள், தமிழை தான் வீட்டில் பேசுகிறோமே, அதற்கு பதில் இந்தி கற்றுக்கொள்ளலாம் என்று இந்தியை தேர்வு செய்கிறார்கள். ஆக, தமிழை காப்பாற்ற வேண்டும்.

‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை நான் பார்க்கவில்லை, ஆனால் இங்கு பேசியவர்களின் பேச்சை கேட்கும்போதே, படம் மிக சிறப்பாக வந்திருக்கும் என்பது தெரிகிறது. இதுபோன்ற சிறிய படங்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். சின்ன தயாரிப்பாளர்கள் சம்பாதித்தால், அவர்கள் அதை சினிமாவில் தான் முதலீடு செய்வார்கள். எனவே, ‘ஒன் வே’ படத்தின் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை ஆரா பேசுகையில், “இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தின் மூலம் தான் காட்சிகளை எப்படி உள்வாங்கி நடிப்பது என்று கற்றுக்கொண்டேன். இந்த படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்த் பேசுகையில், “வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. அவர்கள் என்னை சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். படத்தின் கதை மற்றும் காட்சிகள் தான் பின்னணி இசை நன்றாக வர காரணம். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான பிரபஞ்சன் பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இப்போது பல படங்கள் வெளியாகிறது. ஆனால், அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. நூற்றுக்கு ஐந்து சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. எங்கள் படம் வெற்றி பெறுமோ அல்லது தோல்வி அடையமோ, என்று  எங்களுக்கு தெரியாது. ஆனால், ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம். நல்ல படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான பிரபஞ்சன் பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இப்போது பல படங்கள் வெளியாகிறது. ஆனால், அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. நூற்றுக்கு ஐந்து சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. எங்கள் படம் வெற்றி பெறுமோ அல்லது தோல்வி அடையமோ, என்று  எங்களுக்கு தெரியாது. ஆனால், ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம். நல்ல படம் என்பதை விட மிக வித்தியாசமன ஒரு படமாகவும், இன்று சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இந்த படம் இருக்கும். உங்களிடம் கொடுத்து விட்டோம், இனி இதை நீங்கள் தான் மக்களிடம் சென்றடைய வைக்க வேண்டும். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “’ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்தோம், ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருந்தது. பலர் ஆங்கில படங்களை தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இயக்குநர் சக்திவேல் தமிழ் படத்தை ஆங்கிலப்படம் போல் எடுத்திருக்கிறார்.

இதுபோன்ற சின்ன படங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும். சின்ன படங்கள் வெற்றி பெற்றால் தான் சினிமா வாழும், சினிமா தொழிலாளர்கள் வாழ்வார்கள். நாங்கள் எத்தனையோ சின்ன படங்களின் விழாவுக்கு செல்கிறோம். ஆனால், இந்த படம் எங்களுக்கு முழு திருப்தியளித்தது. மேடைக்காக இதை நான் சொல்லவில்லை, இந்த படத்தின் காட்சிகள் நிமிர வைக்கிறது. படத்தில் பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது.

இன்று பெரிய ஹீரோக்கள் பலர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அதில் அவர்களுக்கு சம்பளமாகவே 70 கோடி வரை வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை புதுமுகங்களாக போடலாம் அல்லவா, அதை செய்யாமல் செலவுகளை அதிகமாக்குகிறார்கள். தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும் என்று யாரும் நினைப்பதில்லை. பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் பெரிய இயக்குநர்களா?, இதுபோன்ற சின்ன படங்களை எடுத்து வெற்றி பெறுவர்கள் தான் உண்மையான இயக்குநர்கள்.

இயக்குநர் சக்திவேல் இந்த படத்தில் பல விஷயங்களை வைத்திருப்பது தெரிகிறது. சர்வதேச பிரச்சனையை கிராமத்து கதையுடன் மிக நேர்த்தியாக சேர்த்து அவர் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும். இந்த படத்தை  தமிழகத்தில் வெளியிடும் விநியோகஸ்தர் மாலிக் திறமையானவர், பல படங்களை வெற்றியடைய செய்திருக்கிறார். எனவே, ஒன் வே படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் நன்றியுரை தெரிவிக்க, விழா இனிதே நிறைவடைந்தது.

Trailer Link ::   https://youtu.be/zOWfw1JbDJQ 

Cast & crew :
 Kovai sarala, Prabanjan , aara, , Abdullah , Charles Vinoth and more
Crew:
Director : M.S..Sakthivel
DOP : Muthukumaran
Editor : Saran Shanmugam
Music : Ashwin Hemanth
Sound mix : abhishek Dharshan
Di : Karthick
Stunt: Vicky
Pro: Haswath Saravanan
Production : G group productions
Producer : Rajathi pandian , Prabajan
Theatrical release : AROMAA studios & Sim cine international

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!