ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்பட டீசர் !
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.
அனிருத் குரலில், 2040 ஆம் ஆண்டில் கண்கவரும் உலகத்தில் ஆரம்பிக்கும் டீசர், பல ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. காதல் அரிதான பொருளாகிவிட்ட காலத்தில், காதலுக்கே இன்ஸூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்யப் போகிறான் என விரியும் டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமும், வேறொரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அனிருத்தின் சிக்னேச்சர் ஆல்பம் பாடலான “எனக்கென யாருமில்லையே” பாடல் டீசரின் முடிவில் வருவது ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.
இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத புதிய உலகை காட்டும் இந்த டீசர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து, வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் டீசரைத் தொடர்ந்து, ட்ரெய்லர், ஸ்னீக் பிக்.. ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.