KGF2 Tamil release by Dream Warriors!
இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்!
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களை அதிரச் செய்தன. இதனால் ‘கேஜிஎஃப்’&ன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ல் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் படங்களுக்குதான் இந்தியா முழுமைக்கும் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், இதனை மாற்றிக்காட்டிய முதல் தென்னிந்திய படம் ‘பாகுபலி’. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் அதே போன்றதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘கேஜிஎஃப்: சேப்டர்2’. ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.