I'll do negative roles- Sherina

*கதைக்கு தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் ; விநோதய சித்தம் 

ஷெரினா அதிரடி*


இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விநோதய சித்தம். இந்தப்படத்தில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அறிமுக நடிகை ஷெரினா. குறிப்பாக படத்தில் இவர் பேசும் ஒரு வசனம் தற்போது ரொம்பவே பிரபலமாகி விட்டது. 


கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்து, படிப்பை முடித்தபின் விமான பைலட் ஆக நினைத்தவர், எதிர்பாராத விதமாக மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமா பயணத்தில் இணைந்ததெல்லாம் ஷெரினாவே திட்டமிடாமல் நடந்தநிகழ்வுகள். 


“நான் படிப்பை முடித்திருந்த சமயம்.. ஒருநாள் ஏதேச்சையாக தோழிகளுடன் ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கே Femina Miss India South ஆடிசன்  நடந்து கொண்டிருந்தது. தோழிகளின் தூண்டுதலால் நானும் அதில் போட்டியாளராக கலந்துகொண்டேன்.. ஆனால் ஆச்சர்யமாக, பங்கேற்ற 14 போட்டியாளர்களில் நான் தான் Femina Miss India South ஆக செலக்ட் ஆனேன். அப்போதிருந்து மாடலிங்கில் கவனம் செலுத்த துவங்கினேன்” என்கிறார் ஷெரினா. 


அதன்பிறகு சர்வதேச அளவில் நடக்கும் ஷோக்களில் கலந்துகொள்ள ஆரம்பித்த ஷெரினா Ford Super Model of India world போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று மகுடம் சூட்டப்பட்டார். அது அவரது பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. 


அதன்பின் விதவிதமான பேஷன் ஷோக்கள், விதவிதமான டிசைனர் ஷோக்கள், விளம்பரப்படங்கள் என பிசியான நபராக மாறிப்போனார் ஷெரினா. சென்னை சில்க்ஸ், மலபார் கோல்டு, போத்தீஸ் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார் ஷெரினா.
மாடலிங், விளம்பரம் அதை தொடர்ந்து சினிமா தானே... சரியாக அந்த பாதையில் நுழைந்த ஷெரினா, சுப்புராம் என்பவர் இயக்கத்தில் அஞ்சாமை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். ரகுமான், விதார்த் என முதல் படத்திலேயே சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஷெரினாவின் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்


அந்த சமயத்தில் தான் ஒரு விளம்பரப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தார் ஷெரினா. அப்போது அவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குநர் சமுத்திரக்கனி, அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பதை அறிந்ததும் தான் இயக்கும் வினோதய சித்தம் என்கிற படத்தில் நடிக்கிறாயா என கேட்டுள்ளார், இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு அமையுமா என இரட்டிப்பு சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார் ஷெரினா.


இதோ படம் வெளியாகி மகாலட்சுமி என்கிற கதாபாத்திரமாக ரசிகர்களின் கவனத்துக்கு ஆளாகி பாரட்டுக்களையும் பெற்று வருகிறார்.


“இந்தப்படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன் நீ உன் கதாபாத்திரத்திற்காக எந்த விதமாகவும் தயார் செய்ய வேண்டாம். அப்படியே ப்ரெஷ்ஷாக படப்பிடிப்புக்கு வந்து உனக்கு எப்படி தோன்றுகிறதோ அந்த மாதிரி நடித்தால் போதும் என கூறி என்னுடைய பதட்டத்தை ஆரம்பத்திலேயே போக்கி விட்டார் சமுத்திரக்கனி சார். அதனால் நடிப்பது எளிதாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, முனீஸ்காந்த் ஆகியோருடன் பழகிய நாட்களில் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.


மகாலட்சுமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் அஞ்சாமை படத்தில் நடித்துள்ளேன்,, இதில் சீக்ரெட் ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளேன்.. இதில் எனக்கு பலவித கெட்டப்புகளும் உண்டு,, இந்தப்படத்தின் இயக்குநர் சுப்புராம், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகிய இயக்குநர்களிடம் தனி ஒருவன், பையா உள்ளிட்ட பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். ரகுமான், விதார்த் ஆகியோருடன் நடித்தது மிகப்பெரிய சந்தோஷ அனுபவமாக இருந்தது. இந்தப்படம் தான், நான் நடித்த முதல் படம் என்றாலும் விநோதய சித்தம் முதலில் வெளியாகி விட்டது. இந்தபடம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது” என்கிறார் ஷெரினா.


கதாநாயகியாக நடிப்பதுடன், கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார் ஷெரினா. நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தால் நடிப்பீர்களா என்றால், சற்றே யோசித்தவர், “கதைக்கு முக்கியமான, அதேசமயம் எனக்கு பேர் கிடைக்கும் கதாபாத்திரம் என்றால் நிச்சயம் நடிக்க தயார்” என்கிறார் தைரியமாக.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!