Grand Maanadu Success Meet held !

 வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 




இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்து விட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையை பிடித்துக்கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப்படம் நிரூபித்துவிட்டது. செத்துக்கிடக்கிற செல்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.



ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்து டைரக்டராக மாறி, ஜெயித்து, தோற்று, காணாமல் போய், மீண்டும் திரும்பி வந்து, தற்போது வெற்றி முன்பின் வந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் மாநாடு மூலம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றி எனக்கு கிடைத்திருக்கிறது. ஜப்பானில் இந்தப் படத்தைப் பார்த்த பெண்மணி என் நடிப்பு பிடித்திருக்கிறது என பாராட்டுவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் இந்தப்படத்தில் நான் பேசிய வசனங்களை என்னைப் போல பேசுகின்ற வீடியோக்களையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது, “இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, சற்று பொறுங்கள்.. 25-வது நாளில் வெற்றி விழாவை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.. காரணம் இப்போது பல படங்களுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல.. தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே அந்தப்படத்தால் பயன்பெற்று, அவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளும் இதுபோன்ற வெற்றி விழாக்கள் தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றியை வெளிப்படுத்தும்.


அந்த வகையில் இந்த அனைவரையும் அழைத்து கவுரவப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி.. அதுமட்டுமல்ல இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் பண்ணிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிஜமாகவே பாராட்டுக்குரியவர்” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய காரணமாக அமைந்தது..



கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நலிவடைந்து கிடந்த விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கியதால் மீண்டும் உயிர் பெற்று இதன்மூலம் சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அதுதான் மாநாடு படத்தின் உண்மையான வெற்றி.. தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு அடுத்து சரியான திட்டமிடலுடன் கண்டிப்புடனும் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத்தான் நான் சொல்வேன்.. 

அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு 80 நாட்களில் இந்த படத்தை எடுத்து தருவதாக கூறி, 68 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல இந்த கோவிட் காலகட்டத்தில் தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது சம்பளத்தில் 30 சதவீதத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன்.. கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை.. இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு புரோமோஷன் கொடுத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நான் நடித்து வந்தாலும், மாநாடு படத்தை பார்த்துவிட்டு பலரும், இவ்வளவு நல்லா நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.. 



காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சி போல திருவிளையாடலில் தருமி வரும் காட்சி போல இந்தப் படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நான் இணைந்து நடித்த காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட முரட்டுக்காளை படத்தில் நடித்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது போல எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.. இசைஞானி இளையராஜாவே போன் செய்து, “பின்னிட்ட” என்று பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது” என்று கூறினார்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை முதல் முறை மொத்தமாக ரசித்து பார்த்தேன் என்றால் இரண்டாவது முறை பார்க்கும்போது பின்னணி இசை என்னை மிரட்டி விட்டது. அந்தவகையில் யுவன் ஷங்கர் ராஜாவை ‘இசைஞானி இளையராஜாவின் 2K வெர்ஷன்’ என்றுதான் நான் சொல்வேன்..  

சிம்புவுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.. இவ்வளவு பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.  அவர் ஏதோ படப்பிடிப்பில்  இருக்கிறார் என்று சொன்னார்கள்.. ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும்.. வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது” என்று பேசினார்

இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம். இடையில் கோவிட் காரணமாக இந்த படத்தை அப்படியே வைத்துவிட்டு, இதே சிம்பு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை வைத்து சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.. சிம்புவும் அதற்கு ஓகே சொன்னார்.. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அந்த கதை பிடித்திருந்தாலும், மாநாடு படத்திலிருந்து நான் டைவர்ட் ஆக வேண்டாம் முதலில் அந்த படத்தை முடிப்போம் என உறுதியாக நின்றார்

இந்த படம் 68 நாட்களில் முடிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தான்.  சிக்கலான இந்த கதையை எல்லோருமே எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக படத்தொகுப்பு செய்த பிரவீணுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது அதில் மாஷா அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தி முதலில் அந்தப்பாடலை எழுதி படமாக்கியும் விட்டோம். அதன்பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும் அந்த பாடலில் மாஷா அல்லா என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக இருக்காது என கூறியதால் பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.

ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க அவர் பெயரை வேற, என்னை இந்த இடத்தில் பயன்படுத்த வச்சுட்டாங்க.. ஒரு காலத்துல என்னோட கம்பெனில படம் பண்ணுவதற்காக இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார் சுரேஷ் காமாட்சி. இன்னைக்கு அவரோட கம்பெனிஇல நான் படம் இயக்கியிருக்கிறேன்.. அந்த அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்” என்று கூறினார். 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாமே படத்திற்காக தானே தவிர, எங்களுக்குள் பர்சனலாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். 





அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.. 

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும்.. இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது” என்று கூறினார்

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story