ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு...இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி*
தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு
கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம்.
சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது
தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில்
இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’கடைசி
விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை.
யெஸ்... கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் இந்த ‘மாமனிதன்’.அச்செயல் இன்னும் பல்கிப்பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
எப்படி சாத்தியமானது இப்படி ஒரு வேள்வி என்று கேள்வி எழுகிறதல்லவா? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் பாக்கலாம் வாங்க...
பெயர் இ.பா.வீரராஹவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸாப் குழுக்கள் மூலம் தனது சின்ன சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறார். 2019 வரை அப்படி அவரால் வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,345ஐத் தொடுகிறது. சாதனை சின்னது என்றாலும் பொன்னது அல்லவா?
இத்தகவலை அறிந்த சன் டி.வி சமூக செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் ’நம்ம ஊரு ஹீரோ’ நிகழ்ச்சியில் அவரை சிறப்பித்து கவுரவிக்கிறது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நவீன வள்ளலார் நம்ம விஜய் சேதுபதி.
இனி வீரராஹவனே தொடர்கிறார்...’’நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சாரை தற்செயலாக சந்தித்தது என் வாழ்வில் நடந்த அற்புதம் என்றே சொல்வேன். பொருளாதாரரீதியாக வலுவாக இல்லாத நான், அப்போது மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு பகுதிநேர சமூக சேவையாகவே அதைச் செய்து வந்தேன்.
அந்நிகழ்ச்சியின்போதும் அது முடிந்தபிறகும் என்னிடம் மிகவும் அக்கறையாகப் பேசிய விஜய் சேதுபதி சார்,” நீங்க செய்யிற இந்த சேவையை முழு நேரமாகத் தொடர என்னால முடிஞ்ச எல்லா உதவிகளையும் செய்யிறேன்’ என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார். அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மந்திரச் சொற்கள் மாதிரியே பட்டது. அவர் வார்த்தைகளை நம்பி, உடனே என் வேலையை ராஜினாமா செஞ்சேன்.
அந்த நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி மார்ச் மாதம் 2019 ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டின் பல பகுதியில் இருந்து - வேலை அளிக்கும் நிறுவனங்கள்கிட்ட இருந்து, வேலை தேடுபவர்களிடமிருந்து அழைப்புகள் தொலைபேசி & வாட்சப் மூலமாகவும் அதிக அளவில் வந்து சேர்ந்தது. அந்தத் தகவலை சார் கிட்ட சொன்னபிறகு பயங்கர உற்சாகமாகிட்டார். அதற்குத்தானே ஆசைப்பட்டார் விஜய் சேதுபதி? உடனே புதுச்சேரி-தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து இந்த சேவையை விரிவாக செய்வதற்கான அறங்காவலர் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து ஒருங்கிணைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனமாக செயல்பட உதவினார் . உதவினார் என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. எனக்கும் என்னைச் சார்ந்த ஊழியர்கள் அத்தனை பேருக்கும் சரியான தேதியில் சம்பளப்பட்டுவாடா செய்துகொண்டே இருந்தார்.
சாரோட ஸ்ட்ராங்கான சப்போர்ட்டால, 14 மார்ச் 2019 ல் புதுச்சேரியில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் - அலுவலகம் என்னை நிறுவனர் & நிர்வாக அறங்காவலராகக் கொண்டு செயல்படத்துவங்கிச்சு.
அதை தொடர்ந்து தமிழ்நாடு & புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் இருந்து சிறு,குறு, பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மனிதவள தேவை விபரங்களை அளித்து அதனை வேலை தேடும் நபர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார். அந்த வேலைவாய்ப்பு தகவல்களை வாட்சப் & YOUTUBE மூலம் கொண்டு சேர்த்ததன் பயனாக பல்வேறு பகுதியில் உள்ள நபர்களிடமிருந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் அதிக அளவின் வர துவங்கியது , அந்த சேவை முற்றிலும் கட்டணமின்றி கிடைக்கப்பெற்றது இரு தரப்பினரும் பயனடைந்தனர்.
இன்னொரு பக்கம், இந்த சேவை மூலம் பயன்பெற்ற நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி, மனித வள குழுக்களில் (HR FORUM) பகிர துவங்கினர். அதன் பயனாக தமிழநாடு & புதுச்சேரியில் உள்ள பல HR FORUM களில் இருந்து அழைப்பும் வந்தது சேவையும் பலருக்கு பயனடைய வாய்ப்பாக அமைந்தது இதன் அடிப்படையில் தினம்தோறும் அதிக எண்ணிக்கையிலான வேலை தேடும் நபர்களுக்கும் பயனடைந்தனர்.
தொடர்ந்து மார்ச் 20 - 2022 வரையில் நிறுவனங்களில் இருந்து தினம்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1,00,133 படித்த தகுதியான நபர்கள் வேலை பெற்று பயனடைந்து உள்ளனர். தற்போதைய தகவல்களின் அடைப்படையில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்தி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மற்றும் YOUTUBE [VVVSI CAREER GUIDELINES ]
சேனல் வாயிலாக பின்பற்றி வருகின்றனர் .
மேலும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கமானது இதனுடன் சேர்த்து, தினமும் அரசு வேலை வாய்ப்பு தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும், அரசு வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டுதல்களை அளிப்பது , அரசின் சுயதொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து சுயதொழில் முனைவோரை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்து 73 சுயதொழில் முனைவோர்களை உருவாக்கியும் உள்ளது மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு & வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளது. இத்துடன் 17 வேலைவாய்ப்பு முகாம்களை தனியாகவும், 3 முகாம்களை அரசுடன் இணைந்தும் நடத்தி உள்ளது. முதலில் பாண்டிச்சேரியில் துவங்கப்பட்ட சத்மில்லாத இந்த யுத்தம் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களை, குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
நீங்களோ உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ வேலை தேடும் பட்சத்தில் https://www.vvvsi.com இணைய தளத்தில் பதிவு செய்து வாட்சப் லிங்க் ஐ பெற்று வேலை வாய்ப்பு தகவல்களை தினமும் பெறலாம் | வேலை கொடுக்கும் நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் info@vvvsi.com மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த சேவை வாயிலாக வேலைதேடும் நபர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமும் பயனடைய தொடர்ந்து முழு உதவி செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கும், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தன்னார்வலர்கள், மனிதவள வட்டார அமைப்புகள் (HR FORUM) அனைவரும் தங்களின் நன்றியை உரித்தாக்குகின்றனர் “ என்று உணர்ச்சி ததும்ப முடிக்கிறார் வீரராஹவன்.
“ஒரு நிமிஷம்...மிஸ்டர் வீரராஹவன்...உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி...இப்படி ஒரு பத்திரிகை செய்தியை நீங்க குடுக்கிறது விஜய் சேதுபதிக்குத் தெரியுமா?
“ நிச்சயமா இல்லை சார். இந்தத் தகவலை வெளிய சொல்ல முயற்சித்தபோதெல்லாம் ரொம்ப கண்டிப்பான முறையில என்னைத் தடுத்துட்டே வந்துருக்கார். இந்த முறையும் அதையேதான் செய்வார்னு நினைச்சிதான் நானே வெளியிடுறேன். அவர் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவரோட மனசு எவ்வளவு பெருசுன்னு, தான் சம்பாதிக்கிற செல்வம் அத்தனையும் மக்களுக்குத்தான்னு நினைக்கிறதாலதான் அவருக்கு மக்கள் செல்வன்னு பொருத்தமா பேரு வச்சிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியட்டும்.