Banaras Film single track released!



*பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் புதுமுக நடிகர் ஜையீத் கானின் 'பனாரஸ்'*


'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார்.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் வெளியான ‘குரங்கு பொம்மை’ எனும் படத்திற்கு இசையமைத்த கன்னட திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளரான அஜனீஸ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாய கங்கா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், ‘பனாரஸ்’ படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், இயக்குநர் ஜெய தீர்த்தா, நடிகர் சுஜய் சாஸ்திரி, கதாநாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மோன்டோரியோ ஆகியோருடன், தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி.கே. ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இவ்விழாவில் இயக்குநர் ஜெய தீர்த்தா பேசுகையில், '' பனாரஸ் படத்திற்கு முன்பாக கன்னடத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ படத்தை தமிழில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார். நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. வீதியோர நாடகக் கலைஞனாக பயணத்தைத் தொடங்கி, படங்களை இயக்கி வருகிறேன். பனாரஸ் படத்தில் காசியை பின்னணியாக கொண்டு காதல் கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் காதல் என்பது அழகை பார்த்து வருவதில்லை. இதயபூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் தான் காதல் உண்டாகிறது என்பதனை, மர்மங்கள் நிறைந்த காசியை கதைக்களமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கிறேன். இதன் பின்னணியிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. திரைப்பட படைப்புகளுக்கு மொழி பேதம் இல்லை. என்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படம், தமிழ் ரசிகர்களின் முன்னிலையில் தான் விருதினை பெற்றது. அந்த வகையில் சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதில் தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள். இதற்காக நான் பெருமிதம் அடைகிறேன். ‘பனாரஸ்’ திரைப்படம் தமிழிலும் வெளியாவதை பாக்கியமாக கருதி, உங்களின் ஆதரவை கேட்கிறேன். என்னுடைய இயக்கத்தில் தயாரான ஏழு படங்களில் ஐந்து படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ’பனாரஸ்’ படத்திலும் நடிகர் ஜையீத் கானை கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கிறேன். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை தமிழில் பாடலாசிரியர் பழனி பாரதி எழுதியிருக்கிறார். இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘மாய கங்கா.. ’என்ற பாடலையும் அவரே எழுதியிருக்கிறார். இந்த ‘பனாரஸ்’ படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை காமராசன் எழுதியிருக்கிறார். ஒத்துழைப்பு வழங்கிய ஒளிப்பதிவாளர் அத்வைதா, இசையமைப்பாளர் அஜனீஸ் உள்ளிட்ட படக் குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.



நாயகன் ஜையீத் கான் பேசுகையில், '' பனாரஸ் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் ஜிகே ரெட்டி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளரும், என்னுடைய தந்தையும் பால்யகால நண்பர்கள். நடிகனாக வேண்டும் என்று தீர்மானித்தவுடன் எதிர்ப்பு தெரிவித்த என்னுடைய பெற்றோர்களை, தயாரிப்பாளர் திலக்ராஜ் அவர்கள் தான் சமாதானம் சொல்லி, நடிப்பு பயிற்சி கல்லூரிக்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு நடிப்புடன் நடனம், சண்டைக் காட்சிகளையும் கற்றுக் கொண்டேன். முதல் படமே பான் இந்திய அளவில் வெளியாகும் திரைப்படம் என்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ‘பனாரஸ்’ படத்தை படத்தின் கதை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றது. படக்குழுவினர் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கடினமாக பணியாற்றியிருக்கிறோம். இதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் சூழலில், கதாநாயகியுடன் காதல் காட்சிகளில் நடிப்பது சவாலாக இருந்தது. காசி புதிரும், மர்மங்களும் நிறைந்த நகரம். அதனால் இந்த பாடல் காட்சியில் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் பார்த்துவிட்டு விமர்சிக்க வேண்டும். ‘பனாரஸ்’ படத்தின் தெலுங்கு பதிப்பை ‘புஷ்பா’ பட புகழ் இயக்குநர் சுகுமார் வெளியிட்டார். ஹைதராபாத்திலும் ‘பனாரஸ்’ படக்குழுவினருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழிலும் ‘பனாரஸ்’ படக்குழுவினருக்கு பேராதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.'' என்றார்.


தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி பேசுகையில், '' தயாரிப்பாளர் திலகராஜ் என்னுடைய நீண்டகால நண்பர். அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கை தமிழில் வெளியிடுவதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகன், கதாநாயகியின் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. காட்சிகளும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன.  இதற்காக இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் என்பது அவசியம். ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் கையில்தான் இருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அதனை இன்றிலிருந்து தொடங்கினால்.. மூன்று மாதத்திற்குள் உங்கள் உடலில் மாற்றம் தெரியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஒழுக்கம் இதனை கடைப்பிடித்தால், ஆரோக்கியத்துடன் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.'' என்றார்.


இந்த விழாவில் நாயகன் ஜையீத் கான் மற்றும் நாயகி சோனல் மோன்டோரியோ மேடையில் நடனமாடியது வருகைத்தந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.



Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!