சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை - சாய் பல்லவி


பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசும்போது, என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15ந் தேதி வெளியாகிறது. பார்த்து விட்டு கூறுங்கள். ஒளிப்பதிவு இப்படத்தில் ஸ்ரீயந்தி மற்றும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். என்னுடைய நண்பர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடிப்பார். இப்படம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யலட்சுமி எங்களுடன் இணைந்து ஆதரவு கொடுத்தார். 2D ராஜசேகர் சாருக்கு நன்றி. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் இல்லையென்றால் இப்படம் இல்லை என்றார்.


நடிகை சாய் பல்லவி பேசும்போது, சாய் பல்லவியால் தான் இப்படம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையை படமாக கொடுத்திருக்கிறார்கள். 

பொதுவாக இயக்குனருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குனர் கெளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார். படத்தில் பணியாற்றியாவர்கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அல்லாமல் படத்திற்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.



ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். அப்போது அவரும் இதில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன். எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் பார்த்ததில் எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கூட தெரியவில்லை. ஏனெபிளாக்கி ஜெனின்றால், நான் சூர்யா சாரின் மிகப்பெரிய விசிறி. அவரைப் பார்த்து உறைந்து போனேன் என்றார்.





நடிகை ஐஸ்வர்யலட்சுமி பேசும்போது, 3 வருடங்களாக கார்கியுடன் பயணித்து இருக்கிறேன். ஆனால், இயக்குனர் கெளதம் ராமசந்திரன் 4 வருடங்கள் போராடியிருக்கிறார். சாய் பல்லவி இல்லாமல் கார்கி இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.


2D ராஜசேகர் பேசும்போது, கார்கியோட இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாய்பல்லவி ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை புத்திசாலிதனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். சூர்யா இப்படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு இப்படத்தை நாமே வெளியிடுவோம் என்றார். இப்படத்தை சாதாரணமாக எடுக்கவில்லை. குறைந்த செலவிலும் எடுக்கவில்லை என்றார்.






சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் பேசும்போது, நாம் ஒரு தொழிலில் இருக்கிறோம். அதில் பயணித்து கொண்டு இருக்கும் போது பெரிதாக தெரியாது. ஆனால், இடையில் எதிர்பாராத மகிழ்ச்சியான தருணம் வந்தால் அதை சாதாரணமாக கடந்து விட முடியாது. அப்படிதான் இப்படம் பார்த்த போது இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து, நான் பின் தொடர்ந்தது சாய் பல்லவியின் கண்கள் தான். இப்படத்தின் இறுதி காட்சியில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.


இப்படத்தை 2D நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பேராசையாக இருந்தது. ராஜசேகரும் சூர்யாவும் பார்த்து ஒப்புக் கொண்டார்கள். ஆகையால், இப்படம் தரமானதாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது. ஒரு திகில் படத்தில் கூட இந்தளவுக்கு தாக்கம் இருக்குமா என்று தெரியாது என்றார்.


நடிகர் காளி வெங்கட் பேசும்போது, முதலில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இப்படம் மக்களிடம் எப்படி சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 2D-க்கு சென்ற பிறகு தான் நிம்மதியாக இருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்கும் போது பதட்டமாக இருந்தது. ஏனென்றால், இது மற்ற படங்களைப் போல் இருக்காது. இறுதிக் காட்சியைக் கேட்கும் போது இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.


ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார் என்றார்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!