சொப்பன சுந்தரி ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்



வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் 'சொப்பன சுந்தரி' என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்திற்கு 'சொப்பன சுந்தரி' என பெயரிடப்பட்டிருப்பதால் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் 'சொப்பன சுந்தரி' தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர். நகைச்சுவை வேந்தர்களான கவுண்டமணி- செந்தில் தொடங்கி, இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ். ஜி. சார்லஸின் முந்தைய படத்தின் வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபு வரை.. இந்த பெயரை பயன்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள். அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Popular posts from this blog

Film Review: 7G The Dark Story

Movie Review : Jama

Movie Review : Pechi