விடுதலை’: நன்றி விழா!


ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.இதில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசியதாவது, ”இந்த வெற்றி எனக்கு எமோஷனலான ஒன்று. ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல படத்தோடு வரவேண்டும் என நினைத்தபோது இதை ஒத்துக் கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. படத்தில் அனைவருமே கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு சக்சஸ் ஃபார்முலாவுக்கான ஜோனில் இருக்கும் படம் கிடையாது. அதனால், படம் வெளியாகும்போது எனக்கு ஒரு பதட்டம் இருந்தது. இந்தப் பயம் பொருளாதார ரீதியாக கிடையாது. ஒரு இடைவெளிக்குப் பிறகு வருகிறோம் நல்ல படமாக அமைய வேண்டும் என்றுதான். இந்த வெற்றியை ஒத்துக் கொண்டு அடுத்தடுத்து பொறுப்புடன் செயல்படுவோம்” என்றார்.

நடிகர் சேத்தன் பேசியதாவது, “சினிமாவில் எப்போதும் அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும் என்றால் வெற்றி படங்களிலும் வெற்றிமாறன் படங்களிலும் இருக்க வேண்டும். சினிமாவில் இத்தனை வருடங்கள் நான் போராடி சோர்ந்து போய் இருந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்த வெற்றிக்கு நன்றி. தயாரிப்பாளரின் ஆதரவுக்கு நன்றி. சூரி, பவானி ஸ்ரீ, உடன் நடித்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.
நடிகை பவானிஸ்ரீ பேசியதாவது, “’விடுதலை’ போன்ற ஒரு நல்ல படத்தில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் வந்ததில் இருந்து என் பெயர் ‘பாப்பா, தமிழரசி’ என்று மாறிவிட்டது. அதற்கு காரணமான வெற்றிசாருக்கு நன்றி. சூரி சார், விஜய்சேதுபதி சார், சேத்தன சார், சந்திரா மேம் என அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரது பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி”.

கலை இயக்குநர் ஜாக்கி, “வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப் படத்தில் வேலைப் பார்த்தது கடினமாக இருந்ததா, சவாலா என்று பல பேட்டிகளில் கேட்டார்கள். அதை சாத்தியப்படுத்திய எனது அணிக்கு நன்றி. குறிப்பாக அந்த ட்ரெயின் செட்டப் குறித்து பலரும் பாராட்டினார்கள். அனைவருக்கும் நன்றி”.நடிகர் சத்யா பேசியதாவது, “இந்த இரண்டு வருடங்கள் எனக்கு பயிற்சி காலம்தான். இப்போதைக்கு வெளியே விட்டிருக்கிறார்கள். இந்தப் படம் வெளியான சமயத்தில் என் அம்மா அப்பா இறந்து விட்டார்கள். அவர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பனம்”.

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் பேசியதாவது, “என்னுடைய தமிழ் ஆர்வமூட்டும்படி இருப்பதாக விஜய்சேதுபதி சொன்னார். ஏன் இவ்வளவு நாட்கள் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் அந்த எண்ணம் இருந்தது உண்மைதான். இந்தப் படத்திற்காக வெற்றி என்னை அழைப்பதற்கு முன்புதான் ஒரு விளம்பரத்தில் நடித்தேன். வெற்றி கேட்டதும் உடனே சம்மதித்து விட்டேன். கமல் சார் சொல்வது போல, ‘எனக்குள் இருந்த நடிகரை எழுப்பி விட்டார்’ வெற்றிமாறன். ஒரு சிறுகதையை பெரிய கதையாக மாற்றி இருக்கிறார். அவரது வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு வித்தியாசமாக உள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி. வேல்ராஜ், ஜாக்கி இருவரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சூரி, விஜய்சேதுபதி என இருவரும் அழகான நடிப்பைத் திரையில் காட்டியுள்ளனர். இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்”.நடிகர் சூரி பேசியதாவது, “’விடுதலை’ படம் ரிலீஸான வேகத்திலேயே இப்படியொரு நன்றி சொல்லும் நிகழ்வு

நிகழும் என எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஹீரோ என்றால் அது வெற்றிமாறன் சார்தான்.  இந்தப் படம் பார்த்துவிட்டு ‘நான் நல்லா இருக்க வேண்டும்’ என்று பலரும் வாழ்த்தினார்கள். நன்றி. வெற்றிமாறன் இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் வருங்காலத்தில் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என நினைக்கிறேன். சக நடிகனான எனக்கு ஹீரோ விஜய்சேதுபதி மாமா ‘சூப்பர் சூப்பர்’ என பாராட்டுதல் கொடுத்துக் கொண்டே இருந்தார். பவானியுடன் நடித்தது மகிழ்ச்சி. ஆதரவு தந்த எல்லாருக்கும் நன்றி”.ரெட்ஜெயண்ட் மூவிஸ் குணா பேசியதாவது, “இந்தப் படத்தின் டீசர் பார்த்தபோதே  படம் வெற்றியடையும் என்பதை மக்கள் கொடுத்த வரவேற்பை புரிந்து கொண்டேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் லயித்து கொண்டாடி விட்டார்கள். ஒரு புத்தகத்தை, இலக்கியத்தைப் படித்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த படம் இருந்தது. சூரி நடிகர் நாகேஷ் போன்றவர். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் சூரியை ரசித்து விட்டோம். விஜய்சேதுபதியை இரண்டாம் பாகத்தில் ரசிக்க காத்திருக்கிறோம். இரண்டொரு மாதத்தில் இரண்டாம் பாகத்தையும் சீக்கிரம் வெளியிடுங்கள்”.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது, “இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன்தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப் பார்த்திருப்பீர்கள். நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். அவர் சொல்லாமல், அவரது பிஹேவியரில் இருந்தும் புரிந்து கொண்டு செய்வேன். ஏனெனில் மொழி என்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதற்கு முன்பு உணர்வுகள்தான் நம்மிடம் பேசும் மொழி.   இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில்இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன்போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத் தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும். நல்லவேளை நான் பெண்ணாக இல்லை. இப்போதும் அவரைப் பார்த்து பேசாததற்கு காரணம் அதுதான். கூச்சமாக உள்ளது. சிந்தனையில் தடுமாறினாலும், மரியாதையில் அவரிடம் தடுமாறியது இல்லை.

உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு வாத்தியாரை கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது. பல வாத்தியார்களை கிரகித்துக் கொடுத்த வெற்றிமாறன்தான். இந்தப் படம் இப்படி வெளியானதுக்கு முக்கிய காரணம் வெற்றிமாறன். அவருக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் நன்றி. மக்கள் அதை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி சாரின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுகள். க/பெ ரணசிங்கம் படத்தில் பவானியுடன் நடித்திருந்தேன். அதன் பிறகு இரண்டாவது படம் இது. தன் வேலையை சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர். படத்தில் வரும் காட்டி அரசன் வேல்ராஜ். அந்த அளவுக்கு சிறப்பான பணியை செய்துள்ளார். ராஜீவ் சார் இந்தப் படத்தில் நடித்தபோது நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்துகொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, “இந்த மாதிரியான படம் எடுப்பதில் எளிதான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதுதான். அடுத்த எளிதான விஷயம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்று நினைப்பது. இந்தப் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தது யாரும் சொல்லவில்லை. இப்படி ஒரு கதையை கொண்டு வர அது நாங்களே உருவாக்கிக் கொண்டது. ஆனால், இப்படியான கதையை ஆரம்பிக்கிறோம் என அறிவித்ததில் இருந்தே ஊடகங்கள், ரசிகர்கள் என பலரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்து ஆதரவு கொடுத்தார்கள். அதுதான் பெரிய விஷயம் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளது. ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு இந்தக் கதையின் தீவிரம், கருப்பொருள், நாங்கள் பட்ட கஷ்டம் ஆகியவற்றை மட்டுமே மதிப்பிட்டு கிட்டத்தட்ட அனைத்து மீடியாக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது பெரிய விஷயம். மக்கள் இந்த கதையின் வலியை அவர்களுடையதாக எடுத்துக் கொண்டாடினார்கள். அது எங்களுடைய நன்றிக்குரியது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நன்றி. இந்தக் கதையில் நல்லவன் நாயகன். நல்லவனை நாயகனாகப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நல்லவனை கதைநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படத்தில் வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. அதையும் ஏற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கும் காத்திருப்பதாக சொன்ன அனைவருக்கும் நன்றி. இன்னும் இது போன்ற புதிய முக்கியமான கதைக்களங்களை சொல்வதற்கும் ஊக்கமாக இருக்கும். ரெட் ஜெயண்ட் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜா சார் படத்தப் பார்த்துவிட்டு ‘பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்’ என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார். ஏனெனில் நான் படத்தின் பின்னணி இசைக்கு குறைவான நேரத்தையே கொடுத்தேன். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார். 

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!