வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 '

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.



இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இணைய தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்..என புதிய படைப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்குவதற்கு காரணம்.. பல புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தான். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இதற்கு முன் 'சூல்' என்றதொரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வென்றது. இது தொடர்பாக அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் கதையை விவரித்தார். இந்த கதையை கேட்டவுடன் தயாரிக்க ஒப்புக்கொண்டோம். ஏனெனில் இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார். 



படத்தின் இசையமைப்பாளர் தர்ஷன் குமார் பேசுகையில், '' தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பதே கடினம். இந்நிலையில் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' திரைப்படம் வெளியாகிறது. இதற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீலிமா இசைக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு பாடல் அமைப்பதும், பின்னணி இசை அமைப்பதும் கடும் சவாலானதாக இருந்தது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல சர்வதேச கலை இசை கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறோம். படத்தின் பாடல்களும், பின்னணியிசையும் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம் ''என்றார்.




இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் 'சூல்' எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன். இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.'' என்றார். 


நடிகர் அர்ஷத் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே எனும் இந்த திரைப்படத்தில் இர்ஃபான் எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படைப்பு காகிதத்திலிருந்து டிஜிட்டல் படைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு ஷார்ட் ஃபிளிக்ஸ் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். கலைஞர்களாகிய நாங்கள் இந்த கதை மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட... ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் இந்த கதை மீது அதீத நம்பிக்கையை வைத்து தயாரித்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்த இசை பிக்சர்ஸ் நீலிமா இசை மற்றும் இசை அவர்களிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய கனவு நனவான தருணம். இயக்குநர் ஜெயராஜ் பழனியின் இயக்கத்தில் உருவான 'சூல்' என்ற குறும்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்திருந்தார். தற்போது இந்தப் படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். வாய்ப்பிற்கும் நேரத்திற்கும் நன்றி.'' என்றார். 


நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில், '' வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல் ஜி பி டி எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்றார். 


நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குநர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். ‌இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த  சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். '' என்றார். 


தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில், '' இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. 'அரண்மனைக்கிளி' எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்... எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ...! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது. ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது 'பாணி பூரி' தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' தொடங்கியது. 


இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, 'அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ' என்றார். 


அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.‌ இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!