சர்வதேச அங்கீகாரம் பெறப் போகும் சண்டை பயிற்சி இயக்குனர் 'அனல் அரசு'!

 தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர் 'அனல்'அரசு ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும்  முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார். அதேபோல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்-அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி,ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர்,தபாங்-2,தபாங்-3,சுல்தான்,ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான 'ஜவான்' போன்ற பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, தானும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக 'பீனிக்ஸ்[வீழான்]' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.






இவர் ஏற்கனவே பணியாற்றிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, ஆனந்த விகடன் விருது,விஜய் டிவியின் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது(SIIMA)விருது,V4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமி விருது,தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது,நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது போன்ற விருதுகளையும் சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் 'பாலிவுட் பாட்ஷா'  என்றழைக்கப்படும் 'ஷாருக்கான்' நடிப்பில், 'அட்லி' இயக்கத்தில், 'அனிருத்' இசையில்,'அனல்'அரசு அவர்கள் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய  'ஜவான்' திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்கு பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான  விருதுகளையும் வென்றிருக்கிறார்.சமீபத்தில் 'ஜவான்' திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2024-லும்,ஜீ சினி விருதுகள் 2024-லும் விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்பட சண்டை பயிற்சி துறைக்கு 'ஆஸ்கர் விருது' போன்ற ஒரு விருதான 'டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது'களுக்கான(Taurus World Stunt Awards) பட்டியலில்
ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் 'ஜவான்'  திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அவர் இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்திற்கு புறப்படுகிறார். அதற்கு முன்பு இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,"இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டே பிராந்திய மொழிக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். இந்த விருது விழாவில் கலந்துகொள்ள செல்வதற்கு முன்பு நான் பணிபுரிந்த ஜவான் திரைப்படம், ஹாலிவுட் படங்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டு செல்லலாம் என்று வந்தேன்" என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது,"ஜவான் திரைப்படத்தை ஒரு இந்தி திரைப்படமாக பார்க்காமல்,இந்திய திரைப்படமாகத்தான் நான் பார்க்கிறேன்.அது தேர்வாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த விருது விலை மதிப்பற்ற தலைசிறந்த ஒன்றாகும். நடிகர் ஷாருக்கான்,வருண் தவான்,ஷாஹித் கபூர்,அட்லி உட்பட முன்னனணித் திரைக்கலைஞர்கள் இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தியன்-2-வில் தொடக்கம் மற்றும் உச்சக்கட்ட காட்சி உள்பட ஒரு சில பகுதிகளை மட்டுமே நான் இயக்கியுள்ளேன். அவையும் பிரம்மாண்டமாக வந்துள்ளன.மேலும் அடுத்த கட்டமாக வா வாத்தியாரே, இந்தியில் பேபி ஜான்,வார்-2 மற்றும் என் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஃபீனிக்ஸ் திரைப்படமும் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர்களுக்கான பாதுகாப்பு தரம் முன்பை விட தற்போது உயர்ந்துள்ளது.தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ளதால் சண்டைக்காட்சிகளில் தரமும் உயர்ந்துள்ளது. மேலும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், அவர்கள் குடும்பத்திற்கு முக்கியம் என்பதால் அனைவரது பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அனைத்து காட்சிகளும் உருவாக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்",என்றார்.

இந்த விருது மட்டும் அவருக்கு கிடைத்தால், அவரது திரை வாழ்வில் ஒரு மணிமகுடமாக மாறும்.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Movie Review: Maal