Penn Vilai Verum 999 Pubai Mattume audio launched


ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே 'படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார்.

அவர் பேசும்போது


இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் 'திருப்பாச்சி'யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம்  பேசினார் ."என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?" என்றார்.

என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன்.

அவருக்கு நல்ல பெயர் தானே கிடைத்தது ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து என்ன ? என்றேன்.



 "என்னை எங்கே பார்த்தாலும் பட்டாசு பாலு என்றுதான் அழைக்கிறார்கள். பசுபதி என்று யாரும் அழைப்பதில்லை " என்றார்.அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் மக்களிடம் போய்ச் சேர்ந்து இருந்தது.


இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள் .


சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது

 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது

டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை.அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும்.

 அந்த அளவிற்கு  அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன .இவர்களை விட்டு வைக்கக் கூடாது.

ஜெயிலில் தள்ள வேண்டும்


நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான் .தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் .

இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது.செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும்.அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.


நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.


 பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாக பயன்படுத்துவது  என்று பல இடங்களிலும் நடக்கிறது.நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள்,நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை வடிவங்களில்  இருக்கிறார்கள்.  பெண்கள்

 விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி மதகுருமார் களாக சாமியார்களாக அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.


நாம் நம்பிக்கை வைக்கும் அவர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்


சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும்.


 அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.


 பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன - எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம்;நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாக கடந்து போய்விடுகின்றன.


அப்படித் தவறுகள் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவது என்றால் கூட ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துவிட்டு போய் வந்தது போல் 3 மாதம் 6 மாதம் என்று போய்விட்டு , நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டு சென்று வந்தது போல் மகிழ்ச்சியாக வருகிறான்.


இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்"

இவ்வாறு பேரரசு பேசினார்.


படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ்

பேசும்போது


"இந்தப் படத்தை ஆரம்பித்து PV 999 என்று ஹேஷ்டாக் செய்தபோது விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். அதனால் நல்ல வகையில் அது மக்களிடம் போய்ச் சேர்ந்தது.அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தந்த அந்த ஊக்கத்தில் தான் முழு படமாக எடுத்து முடித்திருக்கிறோம் .இப்போதுஅதை வெளியிடுகிறோம். கதாநாயகன் ராஜகமல் தொலைக்காட்சி, விளம்பரங்கள் என்று பரவலாக அறியப்பட்டவர். இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று தெளிவாக இருந்ததால் எவ்வளவோ சர்ச்சைகளையும் தாண்டிப் படம் தயாராகி இதோ வெளியீட்டுக்கே வந்திருக்கிறது.


பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி எத்தனையோ படங்கள் பேசலாம். இதுவரைக்கும்வந்த படங்களில் இது ஐகானிக் படம் என்று சொல்லலாம். RRR படம் அறிவித்துள்ள அதே 7 ஆம் தேதியில் இந்தப் படம் வெளியாகிறது. அதே நாளில் படம் மீது உள்ள நம்பிக்கையில் வெளியிடுகிறோம்'' என்றார்.


நடன இயக்குநர் அர்ச்சனா பேசும்போது,


" இந்தப்படத்தின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் .அந்த அளவுக்கு இசையிலும் சரி காட்சிகளிலும் சரி நன்றாக அமைந்துள்ளது. நாங்கள் காட்சி நன்றாக அமைய வேண்டுமென்று ரிஸ்கான மலைப்பகுதியில் அபாயகரமான இடங்களுக்கெல்லாம் சென்று எடுக்க விரும்பினோம்.நடித்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுத்து அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பாடல் காட்சிகளை பார்த்தால் உங்களுக்குத் தெரியும் எங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாதது" என்றார்


நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது,


"என் கணவர் நடித்ததால் என்று மட்டும்  சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் தான்.  படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது.


இந்தப் படம் பார்த்த பிறகு  பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும்.நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும்.யாராவது படத்தை பார்த்த ஒரு பெண் யோசித்துத் திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி.


என் கணவரின் பாத்திரம் பற்றி முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது பிறகு படத்திற்காகச் சமாதானம் ஆனேன்" என்றார்.


இந்திரஜா ரோபோ சங்கர் பேசும்போது


"முதலில் படத்தின்  தலைப்பே ஆர்வமூட்டியது. படக்குழுவினர் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள் .பெண்களை மையப்படுத்தி படம் எடுப்பது என்பது சுலபமல்ல  .

பல ஆண்டுகளாகத் தெரிந்த ராஜ்கமல் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் "என்றார்


நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது,


"இங்கே வந்தபோது பிரபஞ்சன் எழுதிய 'பெண்' என்கிற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அதன் மூலம் எதுவோ சொல்ல விரும்புகிறார்கள் என்றே நினைத்தேன். இப்படம்  பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது .ராஜ்கமல் ஒரு வகையில் எனக்குத் தம்பி .ஒருவகையில் எனக்கு ரோல்மாடல். அவன் எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பான். எங்கே தான் இப்படி ஓடுகிறான் என்று நினைப்பேன்.இப்போது புரிகிறது  சரியான இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறான் என்று. அவன் மேலும் வளர்வான்.


சில படங்கள் ஓடுகின்றன. சில படங்கள் ஓடுவதில்லை. காரணம் சினிமாவிலும்  தலைமுறை இடைவெளி வந்துவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது" என்றார்


கதா நாயகனாக நடித்துள்ள ராஜ் கமல் பேசும்போது,


"முதலில் கன்னட நடன இயக்குநர் சதீஷ் அவர்களுக்கு என் நன்றி. ஏனென்றால் அவர் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது .நான்  இயக்குநரிடம் கதை கேட்கப் போகவில்லை.  வாய்ப்பு கேட்டுத்தான் போனேன். அப்படித்தான் இந்த படம் எனக்குக் கிடைத்தது


இந்தப் படத்தில் நடித்தபோது இதில் பேசப்படும் பிரச்சினையைப் பார்க்கும் போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. என் இரண்டு மகள்கள் தான் எனக்குக் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எச்சரிக்கிறது இந்தப் படம்.


நான் டிவி நடிகன் என்று என்னை ஒதுக்காமல் இயக்குநர் எல்லாமே நடிப்புதான் என்று என்னை ஏற்றுக் கொண்டு நடிக்க வைத்ததற்கு நன்றி. எந்த சமரசமும் இல்லாமல்  படப்பிடிப்பு நடத்தினார். தான் விரும்பிய காட்சிகளைத்தான் எடுத்தார்"என்றார்.


இவ்விழாவில் டப்பிங் கலைஞர் நடிகர் மது, பப்ஜி பட நாயகி சாண்ட்ரியா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கர்ணன் ருத்ராபதி,நடிகர் ஜெயச்சந்திரன் , சூர்யா டெலிகாம் வெங்கடேஷ் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

 முன்னதாக இயக்குநர்கள் பேரரசு,போஸ் வெங்கட் ட்ரெய்லர் பாடல்களை வெளியிட்டார்கள். பதுங்கி பாயணும் தல படத்தின் தயாரிப்பாளர் அமீனா ஹூசைன் கலந்து கொண்டு வாழ்த்த்தினார். அவருக்கு தயாரிப்பாளர் வரதராஜ். பிரபஞ்சன் எழுதிய  பெண் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story