சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் 'செஞ்சிவழக்கமான சினிமாவின் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையை  எடுத்துக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் 'செஞ்சி'

இப்படத்தை,கணேஷ் சந்திரசேகர் இயக்கி தனது ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். தயாரிப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இருக்கிறது.இப்படத்திற்கு பெங்களூரைச் சேர்ந்த  ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.வி. முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார் .ஆனந்த் மற்றும் உன்னி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளனர்.ஏற்றுமதி வணிகத்தில் இறங்கி உழைப்பால் வெற்றிப் படிகளில் ஏறி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் கணேஷ் சந்திரசேகருக்கு சினிமா மீது அளவற்ற காதல்.

திரைப்படங்களைப் பார்த்து, திரை நுட்பங்களைக் கற்றுக் கொண்டவர், தன் மனதிற்குள் உதித்த கதையை 'செஞ்சி' என்கிற ஒரு படமாக எடுத்து முடித்துள்ளார் . படம் பற்றி அவர் கூறும்போது,

"செஞ்சி என்கிறபோது செஞ்சிக்கோட்டை நினைவிற்கு வருகிறது. செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும்   புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் நினைவிற்கு வரும். அதனால்தான் அதை நினைவூட்டும் வகையில் செஞ்சி என்று படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறோம்.


செஞ்சிக்கோட்டை பற்றி வரலாற்றுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. பல்வேறு மன்னர்கள் செஞ்சி மீது படையெடுத்து உள்ளார்கள். மராட்டியர்கள், பீஜப்பூர் சுல்தான்  போன்றவர்களின் பல படையெடுப்புகளை அந்தக் கோட்டை சந்தித்துள்ளது .அதற்குப் பின்னே ஏதோ செல்வங்களும் பொக்கிஷங்களும் இருந்திருக்க வேண்டும். இந்த அனுமானத்தைக் கற்பனை ஆக்கி  இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .அதாவது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையல் இருக்கிற இடம் பற்றிய ரகசியத்தை அறியும் குறிப்புகள் இக்கால மனிதர்களுக்குக் கிடைக்கிறது. கால மாற்றங்களுக்குப் பிறகு இவர்கள் அடைந்திருக்கும் அறிவால் அதை அறிய முடிகிறதா?அந்தப் புதையல் என்ன? என்று அந்தப் பொக்கிஷம் தேடிச் செல்கிற பயணத்தில் பல திடுக்கிடும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன .அதுதான் இந்தப் படத்தின் கதை.


இந்தப் படத்திற்காகச் செஞ்சிக்கோட்டை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூரில் உள்ள கிராமங்கள் ,கேரளாவில் கல்லார் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் அரங்கமைத்து அங்கே 25 நாட்கள் படம் பிடித்திருக்கிறோம்.

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு தமிழ்த் திரைப்படங்கள் உருவாகி வரும் விதத்தில் வருத்தமும் ஆதங்கமும் உண்டு.காதல், வன்முறை, கவர்ச்சி,கிளுகிளுப்பு, மிகையான செண்டிமென்ட்.  என்கிற சிறு வட்டத்துக்குள் இருந்து வருகின்றன.அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகின்றன.அதைத் தாண்டி இந்த உலகில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன ஆனால் யாரும் அதைச் செய்வதில்லை.

நான் ஒரு சிறு முயற்சியாக என் மனதில் தோன்றிய கருவை எடுத்துக் கொண்டு கதையாக உருவாக்கி இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இது வழக்கம் போல உள்ள சினிமா பார்முலா கதை இல்லை.

 எனக்கு இயற்கையிலேயே மனிதர்கள் அல்லாத ,இந்த உலகத்தில் மனித வாழ்க்கை அல்லாத விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டு.இந்தப் பிரபஞ்சத்தில் தெரிந்து கொள்ளவேண்டிய எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன .அவை மனித புலன்களுக்கெல்லாம் எட்டாத வகையில் உள்ளன.

நாம் நம் பழைய பாரம்பரியச் சின்னங்களை, வரலாற்றுச் சுவடுகளைப் புரட்டிப் பார்த்தால் இதெல்லாம் மனிதர்கள் செய்துள்ளவைதானா என்று இப்போது கூட பிரமிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில்தான் இந்தப் புதையல் தேடிய பயணத்தில் கதையை அமைத்தேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்து சினிமா  கற்றுக் கொள்ளாதவன். ஆனால் எனது இரண்டாவது கல்வியே சினிமாதான் என்கிற அளவிற்கு சினிமாவைப் படித்துக்கொண்டுவருபவன் அந்த வகையில இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன் .

நான் என் ஏற்றுமதி வியாபாரம்  உலகில் 64 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். நான் பல ஹாலிவுட் நட்சத்திரங்களை, இயக்குநர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களை வைத்துப் படம் எடுக்க முடியும் .ஆனால் அதற்கு முன்பே ஒரு அனுபவம் வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் கணினி தொழில்நுட்ப கிராபிக்காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.
அவற்றை அமைக்க 
69 ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் 
 இரண்டு மாதங்களில்  முடியும் என்றார்கள் .  ஆனால் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

யாரும் தொடாத கதையை எடுத்துக்கொண்டு , குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம் . மாஸ்கோ வைச் சேர்ந்த கெசன்யா என்கிற மாடல் முக்கியமான பாத்திரத்தில்  நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமான  ஐந்து சிறுவர்கள் நடித்துள்ளார்கள். நானும் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளேன். மேலும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

கடற்கரை ,பூங்கா, உணவு விடுதி போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது போன்ற மகிழ்ச்சிகரமான அனுபவத்தை இந்த செஞ்சி திரைப்படம் உங்களுக்கு வழங்கும். 

வழக்கமான சினிமாவில் இருந்து விலகி நின்று ரசிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்தப் படம் திருப்தி தரும்  என்கிற உத்தரவாதத்தை  என்னால் தர முடியும் " என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் கணேஷ் சந்திரசேகர்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!