'சீதா ராமம்’ காதல் கடிதத்தை நினைவுப்படுத்தும் - துல்கர் சல்மான்



நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் நடிகர் சுமந்த் பேசுகையில், '' தெலுங்கு திரை உலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும், 'சீதா ராமம்' படத்தில் தான் முதல் முதலாக அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ஹனு ராகவபுடி கதையை விவரித்ததும், பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக முதன் முதலாக சென்னைக்கு வருகை தந்திருக்கிறேன். அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி. 60 காலகட்டத்திய காஷ்மீர் பின்னணியில் ராணுவ வீரர்களின் காதலை கவித்துவத்துடன் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். 'சீதா ராமம்' போன்ற காதல் காவிய படைப்புகள் தற்போது உருவாவதில்லை. இதனால் இயக்குநர் கதையை விவரித்ததும், அவருடைய கற்பனையை நனவாக்க மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். துல்கர் சல்மான் போன்ற இளம் திறமையாளருடன் பங்களிப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆகஸ்ட் 5ஆம்  தேதி வெளியாகும் 'சீதா ராமம்' படத்திற்கு ஆதரவு தாருங்கள்.'' என்றார்.


நடிகை மிருணாள் தாகூர் பேசுகையில், ''  'சீதா ராமம்' படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளில் நன்றாக நடனமாடியிருக்கிறேன் என அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் பாராட்டிற்கு நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தான் காரணம். காஷ்மீரில் அதிக குளிரில்  கடினமாக உழைத்து, இந்த நாட்டியமாடும் காட்சிகளை உருவாக்கினார். 


என்னுடைய கலை உலக பயணத்தில் முதன் முதலாக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  அனைத்து இளம் நடிகைகளும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது. துல்கர் சல்மான் போன்ற ரசிகைகள் அதிகம் கொண்டாடும் நடிகருடன் இணைந்து நடித்திருப்பது மறக்க இயலாதது. '' என்றார்.


நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், '' நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதிலும் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்டத்திய அனுபவங்கள் மிகச் சிறப்பாக 'சீதா ராமம்' படத்தில் இடம் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள தலைமுறைக்கு கடித இலக்கியம்,  கடிதம் எழுதுவது என்பதே புரியாத விசயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை. இயக்குநர் எல்லா கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். கலைஞர்கள் அனைவரும் இயக்குநரின் கற்பனையை படைப்பாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்கினோம்.  'சீதா ராமம் 'தமிழ் பதிப்பிலும் நானே பின்னணி பேசி இருக்கிறேன். '' என்றார்.



இதனிடையே ‘போரூற்றி எழுதிய காதல் கவிதை’ எனும் துணைத் தலைப்புடன் வெளியாகவிருக்கும் இந்த ‘சீதா ராமம்’ படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி. எஸ். வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!