பதினான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் ஸ்ருதிஹாசன்



நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக 'லக்' எனும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3', 'லாபம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பணியாற்ற தொடங்கி பதிமூன்று ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.


இதற்காக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...


'' திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.


என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.


மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.


வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை.



எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.'' என குறிப்பிட்டிருக்கிறார்.


இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா' எனும் திரைப்படத்திலும், நட்சத்திர நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Film Review: 7G The Dark Story

Movie Review: Boomer Uncle