இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை சீதாராமம் : துல்கர் சல்மான் பேச்சு
'சீதாராமம்' படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன்
வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'சீதா ராமம்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் 'சீதா ராமம்' பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினர்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் இயக்குநர் ஹனு ராகவபுடி, கதாநாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழில் வெளியிட்ட லைகா நிறுவனத்தில் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் லைகா தமிழ் குமரன் பேசுகையில், '' சீதாராமம் படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த பட குழுவினருக்கு லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது பெருமிதமாக உள்ளது. நாங்கள் தயாரிக்கும் படங்களை மட்டுமல்லாமல் வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்த 'புஷ்பா', 'ஆர். ஆர். ஆர்', 'டான்' என அடுத்தடுத்து படங்களை வெளியிட்டோம். அந்த வரிசையில் தற்போது 'சீதா ராமம்' படத்தை வெளியிட்டோம். இந்தப் படத்தை மைல் கல்லாகவே கருதுகிறோம். 'சீதா ராமம்' படத்தின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டதாக தெரிவித்தனர். எதிர்பாராத பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் 'சீதா ராமம்' பட குழுவுடன் லைகா இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது.'' என்றார்.
இயக்குநர் ஹனுராகவ புடி பேசுகையில், '' சீதாராமம் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவும், வரவேற்பும் மறக்க இயலாததாக அனுபவமாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் 'சீதா ராமம்' திரைப்படத்தை கொண்டாடுவதை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பட வெளியிட்டிற்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிற்கும், 'சீதா ராமம்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்விலும் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த தருணத்தில் படத்தின் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நானும், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரரும் கலந்து கொள்ள இயலவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தரமான படைப்புகளாக இருந்தால் அதனை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடுவார்கள் என்பதை 'சீதாராமம்' மூலம் உணர்ந்திருக்கிறேன். படத்தின் உலகளாவிய வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவும் ஒரு காரணம். இந்தப் படத்தில் வெவ்வேறு பிராந்தியங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் இடம் பெற்றதால் அவற்றை இணைப்பதிலும், அதனை நேர்த்தியாக வழங்குவதிலும் எதிர்பாராத பல சிரமங்கள் இருந்தன. இருப்பினும் படக்குழுவினர் கடினமாக உழைத்து 'சீதா ராமம்' படைப்பை உருவாக்கினோம். குறிப்பாக காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது இரவு நேரத்தில் பணியாற்றியபோது தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகளும் அங்கு நிலவும் பருவநிலையை எதிர்கொண்டு, போர்க்கால சூழலை போல் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். '' என்றார்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், '' இயக்குநர் ஹனு ராகவ புடி என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்தினார். அவருடன் மூன்று படங்களில் தொடர்ந்து பணியாற்றிருக்கிறேன். 'சீதா ராமம்' படத்தின் மூலம் என்னை புதிதாக திரை இசையுலகிற்கு அடையாளப்படுத்தி இருக்கிறார். இதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நாயகன், நாயகி, இடைவேளை, உச்சகட்ட காட்சி என ஒவ்வொரு தருணத்திலும் இடம் பெற்ற பின்னணியிசையை தனியாக பதிவு செய்து, அதனை என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இணைத்து, ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பையும், ஆதரவையும், பாராட்டையும் வழங்கி இருக்கிறார்கள். இந்த வகையிலான பாராட்டு புதிது என்பதால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களுக்கு சிரத்தையுடன் உழைக்க வேண்டும் என்ற பொறுப்பும் அதிகரித்திருக்கிறது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டுகளில் தயாராகும் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. '' என்றார்.
நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், '' 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை போலவே வித்தியாசமாக உருவான 'சீதா ராமம்' படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவு, வித்தியாசமான படைப்புகளுக்கு உங்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'சீதா ராமம்' என்ற படமே ஒரு கனவு போன்றது. இயக்குநர் ஹனு, கதையை சொல்லும் போது இது ஒரு காவிய காதல் கதை என்பது மட்டும் புரிந்தது. இதற்கு முன் கேட்காத காதல் கதையாகவும் இருந்தது. கதையை முழுவதும் கேட்டதும் அசலாக இருந்தது. ஏனெனில் இயக்குநர் இந்த கதையை அவரது மனதின் அடியாழத்திலிருந்து எழுதியிருந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு போர் போல் நடைபெற்றது. இயக்குநர் என்ன சொன்னாரோ.. அதனை ஒட்டுமொத்த பட குழுவினரும் மறுப்பே சொல்லாமல் பின்பற்றினோம்.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறந்த கலைஞர்கள் நடித்தனர். ரஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், வெண்ணிலா கிஷோர் என தெலுங்கு, இந்தி, பெங்காலி திரைத்துறையில் நட்சத்திர அந்தஸ்தில் உள்ள கலைஞர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் ராம் எனும் கதாபாத்திரம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத வேடம். இந்தப் படத்தை இதுவரை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இசை என்னை முழுதாக ஆக்கிரமிக்கிறது. 'சீதா ராமம்' படத்தை திரையரங்குகளுக்கு சென்று காண்பதில் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தேன்.
இயக்குநரிடம் கதை கேட்கும் போது கூட கடிதம் எழுதும் பழக்கம் தற்போது பெரியளவில் இல்லை என்பதால் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுத தொடங்கி இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தாளில் கடிதம் எழுதி, அதனை புகைப்படமாக எடுத்து, என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் கடித வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.
பட வெளியிட்டிற்கு முன்னர் இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்பது எங்களுக்கு தெரியாதிருந்தது. ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்தி இருக்கலாமே..! என தற்போது நினைக்கிறோம். இருப்பினும் இந்த திரைப்படத்தை எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.