நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் வெளியீடு




பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் 'பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத்  சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். 'ஆதி புருஷ்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பிரம்மாண்டமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையின் நாயகனான ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரம்மாண்டமான ஒலி ஒளி அமைப்பு, லேசர் விளக்குகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன்  டீசரும், போஸ்டரும் வெளியிடப்பட்டது. நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் போஸ்டர், 50 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்டு, சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ராமபிரான், மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்பதும், தசரத சக்கரவர்த்தி சரயு நதிக்கரையில் மேற்கொண்ட புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாக பிறந்தவர், அவர் நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போட்டியில் , வானர படைகளின் உதவியுடன் தீமையின் வடிவமான இராவணனை வென்றார் என்பது தான் ராமாயணம். இந்தப் படத்தின் டீசரில் ராமனாக நடித்திருக்கும் நடிகர் பிரபாஸ், நீருக்கடியில் தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சியும், பனி படர்ந்த பிரதேசத்தில் ராவணனாக நடித்திருக்கும் சயீப் அலி கான் தோன்றும் காட்சியும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. ராமாயண காவியத்தை தற்போதைய இணைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'ஆதி புருஷ்' தயாராகி இருப்பதால்  பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!

Film Review : Thuritham

Film Review : Repeat Shoe